பாஜக கிளை தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்வு: நவ. 11 முதல் 30 வரை நடக்கிறது


சென்னை: பாஜக கிளைத் தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்வு நவம்பர் 11 முதல் 30-ம் தேதி வரை நடக்கிறது என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

பாஜக அமைப்புத் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஹெச்.ராஜா, மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒன்றியம், நகர அளவில் அமைப்புத் தேர்தல் நடத்தும் தேர்தல் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜகவில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. பாஜக ஒன்றிய, நகர நிர்வாகிகள், அதற்கு மேற்பட்ட பொறுப்பில் இருப்பவர்கள், தீவிர உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அதாவது ஒருவர் தீவிர உறுப்பினர் என்றால் அவர் 50 உறுப்பினர்களை சேர்த்திருக்க வேண்டும். மேலும் பூத் என்பது அடிப்படையானது. அந்த பூத்தில் 50 உறுப்பினர்கள் இருந்தால்தான், அது அங்கீகரிக்கப்பட்ட கிளை ஆகும். அந்தவகையில், 50 உறுப்பினர்களை சேர்த்தவர்கள்தான் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு வர முடியும். அந்தவகையில், தற்போது அமைப்பு தேர்தல் நடத்துவதற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நவ.11-ம் தேதி முதல் நவ.30-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிளைகளிலும் தலைவர் மற்றும் நிர்வாகக் குழு நியமிக்கப்படுவார்கள். அதாவது தலைவர் மற்றும் 11 கிளை கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். அதில், 3 பேர் பெண்களாக இருப்பார்கள். இதற்காக, மாவட்ட அளவில் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி இன்று வழங்கப்பட்டது. தேசிய அளவில் தற்போது வரை பாஜக பெற்ற வாக்குகளில், 45 சதவீதம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அதேபோல், தமிழகத்திலும் 45 சதவீதம் பேர் உறுப்பினர்களாக இணைந்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்

x