திருநெல்வேலி: தென் தமிழக கடலோர கிராமங்களில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளது. தாது மணல் கதிர்வீச்சு, கூடங்குளம் அணு உலை உள்ளிட்டவை புற்றுநோய் வருவதற்கான அச்சுறுத்தலாக உள்ளது. கூடங்குளம் அணு கழிவுகளை அங்கேயே வைத்து பொதுமக்களை அச்சுறுத்தாமல் ராஜஸ்தான் போன்ற பாலைவனங்கள் நிறைந்த பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை துறை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மார்பக புற்றுநோயை வென்றவர்களுக்கான வெற்றி விழா நிகழ்ச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் தலைமை வகித்தார். தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு சிறப்பு விருந்தினராக பங்கேற்று நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "திருநெல்வேலியில் செயல்படும் மண்டல புற்றுநோய் மையத்தில் ஆண்டுக்கு ரூ.5 கோடி மதிப்பில் புற்றுநோய்க்கான மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. திருநெல்வேலியில் 1200-க்கும் மேற்பட்ட மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர். தென் மாவட்டங்களில் அதிக அளவு கடற்கரை கிராமங்களில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. கடற்கரை கிராமங்களில் காணப்படும் தாது மணல் கதிர் வீச்சும், கூடன்குளம் அணு உலையும் புற்றுநோய் பாதிப்புக்கான காரணமாக உள்ளது.
கூடங்குளம் அணு உலை அணுக்கழிவுகளை அங்கேயே சேகரித்து வைத்துள்ளதால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்த அணுக் கழிவுகளை ராஜஸ்தான் போன்ற பாலைவனங்கள் நிறைந்த பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். பல்கலைக் கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஆளுநருக்கு முழு உரிமை உள்ளது. மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாநில தலைவர் சவிதா ராஜேஷ் என்பவர் நியமிக்கப்பட்டதில் எந்த குறையும் இல்லை.
ஆனால் அவர் சிண்டிகேட் உறுப்பினராக பதவியேற்ற பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் ஏபிவிபி மாணவர்களுடன் செல்பி எடுத்து விளம்பரப் படுத்தியது தவறு. அவர் பொது நலனில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் செய்வதற்கு முதல்வருக்கு முழு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட பல்கலைக் கழகம் தொடர்பாக சட்டப் பேரவையில் 10-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் சட்டமாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இது போன்ற பல மசோதாக்கள் ஆளுநரால் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
ஆளுநர் திருப்பி அனுப்பும் மசோதாக்கள் மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டால் அதனை ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்பது சட்டமன்ற விதி. ஆனால் ஆளுநர் சட்டப் பேரவை மரபுப் படியும் சட்ட விதிப்படியும் நடப்பதில்லை. அவர் ஆர்எஸ்எஸ் விதிப்படி நடக்கிறார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் எந்த தீர்மானத்திற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிப்பது கிடையாது" என்று அப்பாவு கூறினார்.