அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் இன்று (அக்.25) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது: "குரங்கு, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்டவை வயல்களில் புகுந்து நெல், கரும்பு, மக்காச்சோளம், காய்கறி உள்ளிட்ட பயிற்களை நாசம் செய்கின்றன. எனவே, அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை மாவட்ட நிர்வாகம் கையாள வேண்டும். வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் அதிகளவு சிமென்ட் ஆலைகள் உள்ள நிலையில், ஸ்ரீபுரந்தான் கிராமம் வழியாக இயக்கப்படும் லாரிகள் அதிவேகமாக செல்கின்றன.
அதற்கு மாற்று வழி ஏற்படுத்தித்தர வேண்டும். இ-நாம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வீட்டுக்கே வந்து விளை பொருட்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மெற்கொள்ள வேண்டும். அரியலூர் நகர் முழுவதும் ஷேர் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமானூர் கொள்ளிடக்கரையில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்க பனை விதைகளை நட்டு வளர்க்க வேண்டும். மண்ணுயிர் காப்போம் திட்டத்தை விவசாயிகளுக்கு புரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் நிலம் அளவீடு செய்ய டிஜிட்டல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.