பருவமழை பெய்து வருவதால் நோய் பரவும் அபாயம்: சேலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு, புகை மருந்து அடிக்கும் பணி தீவிரம்


சேலத்தில் பருவமழை பெய்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகர் முழுவதும் கொசு புகை மருந்து அடிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொசு புகை மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி பணியாளர். | படம்: எஸ். குரு பிரசாத் |

சேலம்: பருவமழை பெய்து வரும் நிலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக சேலம் மாநகராட்சி சார்பில் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநகர பகுதியில் விடாமல் பெய்து வரும் மழையால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நன்னீரில் உற்பத்தியாக கூடிய டெங்கு கொசுக்களை அழிக்க மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பருவமழை பெய்துவரும் இக்காலக்கட்டத்தில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவை எளிதில் பரவக் கூடும்.

அந்தவகையில், டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை தீவிரப்படுத்தும் வகையில் அனைத்து பகுதிகளிலும் கொசு புகை மருந்து அடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். டெங்கு கொசுக்கள் நன்னீரில் மட்டுமே உற்பத்தியாகும் என்பதால், வீட்டில் மூடப்படாமல் நீண்ட நாட்களாக சேகரித்து வைக்கும் தண்ணீர் பாத்திரங்களை மூடி வைக்கவும், தொட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகளின் பின்புறம் தேங்கும் தண்ணீரை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுத்தம் செய்வதன் அவசியம் குறித்தும் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் 50 வீடுகள் வரை கொசு ஒழிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வீதிகள், முக்கிய சந்திப்பு சாலை, பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், வணிக வளாக பகுதிகளில் கொசு புகை மருந்து அடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் குளோரினேஷன் செய்யப்படுவதை அலுவலர்கள் கண்காணித்து உறுதிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, டெங்கு கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

x