கஸ்பாபுரம்: தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது என எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு துணை முதல்வரை டேக் செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்த நபரின் வேண்டுகோளை ஏற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து நேற்று வருவாய்த் துறையினர் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே அகரம் தென் ஊராட்சி, கஸ்பாபுரம் கிராமம் கிருஷ்ணா நகர் - கணேஷ் நகர் மெயின் ரோடு பகுதியில் அண்மையில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் இது குறித்து எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அந்த பதிவில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை டேக்செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மழைநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக கஸ்பாபுரம் பகுதிக்கு கடந்த 16-ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் அந்த பகுதியில் மழைக் காலங்களில் மழை நீர் நிரந்தரமாக தேங்காதபடி, அகரம் ஏரிக்கு மழை நீரை கொண்டு செல்லும் வகையில் கால்வாய் அமைக்க நிரந்தர திட்டம் தயாரித்து அதற்கான மதிப்பீட்டை உடனடியாக அனுப்புமாறு ஆட்சியரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் தாம்பரம் வருவாய் துறையினர் கடந்த சில நாட்களாக கால்வாய் ஆக்கிரமிப்பை அளவிடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பதுவாஞ்சேரி பகுதியிலிருந்து வெளியேறும் மழை நீர் இந்த கால்வாய் வழியாக கஸ்பாபுரம் தாங்கல் ஏரிக்கு சென்று அங்கிருந்து அகரம் ஏரிக்கு செல்லும் வகையில் ஏற்கெனவே நீர் வழித்தடம் உள்ளது.
தற்போது இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்காமல் கால்வாய் வழியாக ஏரிக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கஸ்பாபுரம் தாங்கல் ஏரியிலும் ஏராளமான ஆக்கிரமிப்பு உள்ளதால் அவற்றை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.