சிதம்பரம் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்றதற்கான ஆதாரங்கள் உள்ளதாக அரசு தகவல்


சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு-செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்யக் கோரியும், கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் கூறி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ‘‘அறநிலையத் துறையின் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்" என்றார். மேலும், 2018 முதல் 2022 வரையிலான கோயில் கணக்கு வழக்குகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்ஆர்ஆர்.அருண் நடராஜன் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் 1974, 1985, 1988-ம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் விற்பனை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. கோயில் சொத்துகள் குறித்து விசாரிக்க சிறப்பு வட்டாட்சியரை நியமித்து தமிழக அரசு 1976-ல் அரசாணை பிறப்பித்துள்ளது.

கோயிலுக்கு நிலம் தானமாகக் கொடுத்தவர்களின் வாரிசுகள் வசமுள்ள 1267.09 ஏக்கர் நிலத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் கோயிலுக்கும், தர்ம காரியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், 271.97 ஏக்கர் நிலங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் கோயிலுக்கு செலுத்தப்படுவதில்லை. அதேபோல, கோயிலுக்கு வழங்க வேண்டிய தொகையை தீட்சிதர்களிடம் கட்டளைதாரர்கள் அளிக்கின்றனர். அதற்கு முறையான கணக்கு விவரங்கள் இல்லை.

இது தொடர்பாக பதில் அளிக்குமாறு தீட்சிதர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டபோது, இதுகுறித்து வழக்கு 2017 முதல் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். கோயில் சொத்துகள் விற்பனை தொடர்பான அனைத்து விவரங்களும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் இருந்தே திரட்டப்பட்டு்ள்ளது.

சேத்தியாதோப்பு சார் பதிவாளர் அலுவலகத்தில் 1974-ல் 12.5 ஏக்கர் நிலம் ஸ்ரீராமலு நாயுடு என்பவருக்கு, வேம்பு தீட்சிதர் என்பவரால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 5.5 ஏக்கர் நிலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு 1985, 1988-ம் ஆண்டு்களில் தில்லை நடராஜர் தீட்சிதர் என்பவரால் எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களை மீட்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து நீதிபதிகள், அறநிலையத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைக்கு பொது தீட்சிதர்கள் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ. 14-க்கு தள்ளிவைத்தனர்

x