தொடர் உச்சத்துக்கு பிறகு தங்கம் விலை சற்று சரிந்தது: ரூ.440 குறைந்து பவுன் ரூ.58,280-க்கு விற்பனை


சென்னை: நாளுக்கு நாள் தொடர் உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை நேற்று ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.58,280-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது.

பின்னர் அவ்வப்போது விலை குறைந்தாலும், தொடர்ந்து ஏறுமுகமாகவே காணப்பட்டது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக உயர்ந்து, நேற்று முன்தினம் பவுன் ரூ.58,720 என்ற வரலாறு காணாத உயர்வை அடைந்தது. இதனால் திருமணத்துக்காக தங்க நகை வாங்குவோர் கவலையடைந்தனர். இந்நிலையில், நேற்று விலை சற்று குறைந்தது. அதன்படி, பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.58,280-க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒருகிராம் தங்கம் ரூ.7,285-க்கு விற்பனையானது.

24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.61,920-க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையும் தொழிற்சாலை தேவை உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.110-க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 ஆயிரம் குறைந்து ரூ.1,10,000-க்கு விற்பனையானது.

x