கிறிஸ்தவ சொத்துகளை நிர்வகிக்க தனி வாரியம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அறிவுறுத்தல்


மதுரை: இந்து, இஸ்லாமிய சொத்துகளை நிர்வகிக்க தனி அமைப்பு இருப்பதுபோல, கிறிஸ்தவ சொத்துகளை நிர்வகிக்க தனி சட்ட வாரியம் ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தாளாளர் நியமனம் தொடர்பான வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கல்லூரி தாளாளராக ஒருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், பேராசிரியர்கள் சிலர் புகார் அளித்ததால், அந்த நியமனத்துக்கு சிஎஸ்ஐ ஆயர் தடை விதித்துள்ளார். தாளாளர் தேர்வு விவகாரத்தில் சிஎஸ்ஐ விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. ஒரு சிலர் சிஎஸ்ஐ நிர்வாகத்தின் விதிகளை (பைலாக்கள்) பின்பற்றாமல், ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளது தெரியவருகிறது.

ஆலய சொத்துகள் முறைகேடாக நிர்வாகம் செய்யப்படுவதும், நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதும் பல வழக்குகள் மூலம்தெரிகிறது. இந்த சிக்கலைத் தீர்க்க, அவ்வப்போது தற்காலிக நடவடிக்கையாக நிர்வாகிகளை நியமிப்பது வழக்கமான நடைமுறையாகும். இந்த விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வுகாணவேண்டிய நேரம் வந்துள்ளதாக நீதிமன்றம் கருதுகிறது. கிறிஸ்தவ நிறுவனங்கள், கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு பொதுப்பணிகளைச் செய்து வருவதை மறுக்க முடியாது. இந்த நிறுவனங்களின் சொத்துகள் மற்றும் நிதி பாதுகாக்கப்பட வேண்டும். இந்து மற்றும் இஸ்லாமிய அறக்கட்டளைகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவை. அவற்றைப் பாதுகாக்க அறநிலையத் துறை, வக்பு வாரியம் ஆகியவை உள்ளன. ஆனால், கிறிஸ்தவ அமைப்புகளுக்கு அத்தகைய விரிவான ஒழுங்குமுறை எதுவும் இல்லை.

கிறிஸ்தவ ஆலயங்களின் அமைப்புகளை மேலும் பொறுப்புடன் செயல்பட வைக்கவும், நிர்வாக விவகாரங்களை ஒழுங்கமைக்கவும் ஒரு சட்டப்பூர்வ வாரியம் இருக்க வேண்டும். எனவே, மத்திய உள்துறை அமைச் சக செயலர் மற்றும் தமிழக அரசின் முதன்மைச் செயலரை நீதிமன்றம் தாமாக முன் வந்து இந்த வழக்கில் சேர்க்கிறது. இருவரும் கிறிஸ்தவ சொத்துகளை முறைப்படுத்த சட்டப்பூர்வ வாரியத்தை ஏற்படுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நவ. 18-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

x