ரயில்வே தேர்வு வாரியத்தில் மாற்றம்; தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும்: வைகோ கண்டனம்


சென்னை: திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரை கோட்டத்தை இணைப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை ரயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் இணைக்க இருப்பதாக தெரிகிறது. ரயில்வே நிர்வாகத்தின் இச்செயல் கடும் கண்டனத்துக்குரியது. இதுகுறித்து ஏற்கெனவே நான் பலமுறை ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்தும், நாடாளுமன்றக் கூட்டத்திலும், தெற்கு ரயில்வே பொது மேலாளருடனான ஆலோசனையிலும் வலியுறுத்தினேன். நல்ல முடிவு எடுப்பதாக அப்போது உறுதி அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வாசுதேவநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதன் திருமலைகுமார் சட்டப்பேரவையில் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். கடந்த 2003-ம் ஆண்டு சேலம் கோட்டம் உருவானபோது, கடும் போராட்டத்தை மீறி மதுரை கோட்டத்தில் இருந்த பொள்ளாச்சி ரயில் நிலையத்தை பாலக்காடு கோட்டத்துடன் இணைத்தனர். தற்போது வரை மதுரைக் கோட்டத்தோடு பொள்ளாச்சி ரயில் நிலையத்தை இணைப்பதற்காக போராடி வருகிறோம்.

இவ்வாறு மதிமுக எப்போதும் தமிழர்களையும், தமிழர் நலம் சார்ந்த செயல்களிலும் கூடுதல் கவனம் எடுத்து போராடி வருகிறது. இதுதவிர, கரிவலம்வந்தநல்லூரில் மீண்டும் ஒரு ரயில் நிலையம் அமைக்க வேண்டும், தென்தமிழகத்தின் கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, விருதுநகர் போன்ற தொழில் மற்றும் வியாபார நகரங்களிலிருந்து பெங்களூரு மற்றும் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு நாள்தோறும் காலை வேளையில் ரயில் மற்றும் கூடுதல் ரயில்களை இயக்கவும் வலியுறுத்தி வருகிறோம். இச்சூழலில் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் வகையில் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு மதுரை ரயில்வே கோட்டத்தை இணைப்பதை இந்திய ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x