கண்ணூத்து தொடக்கப்பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அதிர்ச்சி: கட்டிடங்களை சீரமைக்க கோரிக்கை


திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே கண்ணூத்து கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 90 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை (அக்.24) காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் 5-ம் வகுப்பு அறையை திறந்து பார்த்தபோது, மேற்கூரை பெயர்ந்து வகுப்பறைக்குள் விழுந்துகிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த வகுப்பறை கட்டிடத்தலேயே தலைமை ஆசிரியர் அறையும் உள்ளது. 5-ம் வகுப்பில் 15 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

பின்னர் பெயர்ந்து விழுந்த இடிபாடுகளை அப்புறப்படுத்திவிட்டு வகுப்பறையை மாற்று இடத்தில் தொடர்ந்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி வரண்டாவில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. தற்போது வகுப்பறைக்குள் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக வகுப்புகள் துவங்குவதற்கு முன்பே மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் மாணவர்கள், ஆசிரியர்கள் தப்பினர். ஒருவேளை வகுப்பு நடக்கும் போது விழுந்திருந்தால் பெரிய அசம்பாவிதம் நேர்ந்திருக்கும்.

பழமையான கட்டிடம் என்பதால் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் மேற்கூரைகள் விழுகின்றன. மழைக்காலம் நெருங்குவதால் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அச்சமின்றி இருப்பார்கள்” என்றனர்.

x