தீவிரப் புயல் ‘டானா’ அலர்ட் முதல் விஜய் மாநாடு அப்டேட் வரை - டாப் 10 விரைவுச் செய்திகள்


தீவிரப் புயல் ஆனது ‘டானா’ - உஷார் நிலையில் ஒடிசா: வங்கக் கடலில் உருவான ‘டானா’ தீவிரப் புயல் ஒடிசாவின் புரி மற்றும் மேற்கு வங்கத்தின் சாகர் தீவு இடையே வெள்ளிக்கிழமை அதிகாலை கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டானா புயல் ஒடிசா கடல் பகுதியை நெருங்கியதால் பாரதீப் பகுதி, கேந்திரபாரா மாவட்டத்தின் ராஜ்நகர், பாலசூர், புரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அதேபோல் பத்ரக், பாலசூர், ஜஜ்பூர், கட்டாக், குர்தா, ஜகத்சிங்பூர், கேந்திரபடா மற்றும் புரி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

‘டானா புயல் காரணமாக ஒடிசாவின் 3 கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் வாய்ப்புள்ளது. 14 மாவட்டங்களில் இருந்து 10 லட்சம் பேரை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டானா புயலை எதிர்கொள் ஒடிசா அரசு தயார் நிலையில் உள்ளது. புயல் பாதிப்பை சமாளிக்க மாநில அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்’ என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் தெரிவித்தார். இதனிடையே, ஒடிசாவின் புரியில் உள்ள 12-ம் நூற்றாண்டு ஜெகன்நாதர் கோயிலை டானா புயல் பாதிப்பில் இருந்து பாதுகாக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர் பிரச்சினை: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 128 மீனவர்கள் மற்றும் 199 படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், கூட்டு நடவடிக்கைக் குழுவினால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகள், மீனவர்கள் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வினைக் கொண்டுவரும் என நான் நம்புகிறேன் என்று அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்திய - இலங்கை இரு நாட்டு மீனவர்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசிடம் கொழும்புவிலுள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தி உள்ளது.

வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சோதனை: அதிமுக ஆட்சிக் காலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டனர்.

‘ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்’ - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

‘ஆம்னி பேருந்துகளை கட்டண உயர்வின்றி இயக்க நடவடிக்கை’ - தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக சென்னை, கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர், “கடந்த ஆண்டைப் போலவே கட்டண உயர்வின்றி, தீபாவளியையொட்டி பொதுமக்கள் பயணம் செய்ய உதவுவதாக உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர்” என்று கூறினார்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டதில் உ.பி. தொழிலாளி காயம்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் டிரால் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் காயமடைந்தார். கடந்த ஒரு வாரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இது என்பது கவனிக்கத்தக்கது.

பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல்: கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் புதன்கிழமை இரவு பலத்த மழை பதிவானது. இதையடுத்து எலக்ட்ரானிக் சிட்டியின் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட நேரம் நகராமல் ஸ்தம்பித்து நின்ற சூழலில், அதில் பயணித்த மக்களில் சிலர் நடந்தே வீடு திரும்பினர். சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்க, வாகனங்கள் அப்படியே அதில் நின்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் அசத்தல்: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூஸிலாந்து அணி 259 ரன்களைச் சேர்த்தது. இதில் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசி பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்களைச் சேர்த்தது.

தவெக மாநாட்டுப் பணிகள் தீவிரம்: விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ம் தேதி மாலை, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு வாயில் முகப்பிலிருந்து மாநாட்டு திடல் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் கொடி கம்பம் நடப்பட்டு, அதில் 15 அடி உயரத்தில் தவெக கொடி பறக்க விடப்பட்டது. “தொண்டர்கள் மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக வரவுள்ள வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு, வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1 மணி முதல் 3 மணிக்குள் மாநாட்டுக்கு வருபவர்கள் வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநாட்டுத் திடலில் பெரியார், காமராஜ், அம்பேத்கர் மற்றும் விஜய் கட் அவுட் வைக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகளான வேலுநாச்சியார், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் படங்களும் இடம்பெறவுள்ளது” என்று தவெகவினர் தெரிவித்தனர்.

2025-ல் பிஎஸ்என்எல் 5ஜி சேவை: வரும் 2025-ம் ஆண்டின் பிற்பாதியில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பிறகே 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

x