“மதுரையில் 22 மாநகராட்சி வாகனங்கள் எஃப்சி பெறாமல் இயக்கம்” - அதிமுக அதிர்ச்சி தகவல்


படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: "22 மாநகராட்சி குப்பை வாகனங்கள் எஃப்சி வாங்காமல் இயக்கப்படுகிறது. விபத்து நடந்தால் வாகனங்களை ஓட்டும் பணியாளர்களும், பொதுமக்களுக்கும் யார் பொறுப்பு ஏற்பது" என்று அதிமுக மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா குற்றம்சாட்டினார்.

மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. ஆணையாளர் தினேஷ்குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், மேயர் இந்திராணி, மாநகராட்சியில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை வாசித்தார். அப்போது 2 தீர்மானங்களை நிறைவேற்ற அதிமுக மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் அக்கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் பேசிய சோலைராஜா கூறும்போது, "9-வது தீர்மானம் அடிப்படையில் விரிவாக்கப்பட்ட பகுதி வார்டுகளில் பாதாளச் சாக்கடை வரி, வழக்கத்தை விட உயர்த்தப்படுகிறது. தனிப்பட்ட நபருக்கு தடையில்லா சான்று வழங்குவதற்காக சலுகை வழங்கப்படும் வகையில் 18-வது தீர்மானத்தில் சில விவரங்கள் தவறாக உள்ளது. இந்த இரு தீர்மானத்தையும் நிறுத்தி வைக்கவும். ஏற்கனவே 100 முதல் 150 சதவீதம் சொத்து வரி கடந்த 2 ஆண்டிற்கு முன் உயர்த்தப்பட்ட நிலையில் சமீபத்தில் 15 சதவீதம் உயர்த்திவிட்டீர்கள். தற்போது பாதாளச் சாக்கடை வரியையும் உயர்த்தி மக்கள் மீது அடுத்தடுத்து வரி சுமையை தூக்கி வைக்காதீர்கள்" என்றார்.

மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார்; ”வணிக கட்டிடங்களுக்குதான் பாதாளச் சாக்கடை வரியை உயர்த்தப்பட உள்ளது” என்றார்.

மண்டலத் தலைவர் வாசுகி, ”மாட்டுத்தாவணி அருகே டிஎம்., நகரில் மழை தண்ணீர் வெளியேற்ற ஆணையாளர், மாநகராட்சி ஊழியர்கள் பெரும் முயற்சி எடுத்தனர். அதனால், தற்போது அதில் மழைநீர் தேங்கவில்லை. இது தற்காலிக நடவடிக்கை தான். நிரந்தரமாக மழைநீர் இப்பகுதியில் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதற்கு நாம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மழைநீர் புகுந்த புதிதாக போடப்பட்ட பாதாளச் சாக்கடை சேம்பர், புறநகர் வார்டுகளில் புதிதாக பதிக்கப்பட்ட பெரியார் குடிநீர் திட்ட குழாய்களிலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது. இப்பணிகளை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனத்தை, இந்த திட்டம் தொடங்கிய பிறகு ஒரு ஆண்டிற்கு இந்த குழாய்களை பராமரிக்க உத்தரவிட வேண்டும்” என்றார்.

மண்டலத்தலைவர் முகேஷ் சர்மா, ”இதுவரை நானே எங்கள் மண்டல சுகாதார அலுவலரை(SO) பார்த்ததில்லை. சுகாதார ஆய்வாளர்களும், சரியாக பணிக்கு வருவதில்லை. கவுன்சிலர்கள் பார்க்கிற வகையில் அவர்களுடைய அன்றாட வருகை பதிவேட்டை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள், பிளாஸ்டிக் பேக் கடைகளுக்கு அபராதம் விதிக்கும் ஆர்வத்தை சுகாதாரப் பணிகளில் காட்டுவதில்லை. மாநகராட்சியில் தனியார் கார் பார்க்கிங் அதிகரித்து வருகிறது. அவர்கள் பொட்டல் வரி போடப்பட்ட காலி மனைகளில் தான் நடத்துகிறார்கள். இந்த தனியார் கார் பார்க்கிங்கை கணக்கெடுத்து வணிக சொத்து வரி விதிக்க வேண்டும்” என்றார்.

அதிமுக எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா, ”கடந்த 2 ஆண்டாக மாநகராட்சி கூட்டங்களில் மழைநீர் கால்வாய்களை தூர்வார வலியுறுத்தினேன். தூர்வாராததல் தற்போது மாநகராட்சி வார்டுகள் மழை நீரில் தத்தளிக்கிறது. தூய்மைப் பணியாளர்களில் நிரந்தரப் பணியாளர்களும், தினக் கூலி பணியாளர்களுக்கு சரியாக பணிக்கு வருவதில்லை. அவர்கள் அதிகப்பட்சம் 2 மணி நேரம் பணி செய்தாலே அதிகம். பயோ மெட்ரிக் வருகை பதிவேட்டை நடைமுறைப் படுத்த வேண்டும்.

22 மாநகராட்சி டம்பர் பின் வாகனங்கள் எப்சி பெறாமல் இயக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அதன் பணியாளர்கள், பொதுமக்களுக்கு யார் பதில் சொல்வது. மாநகராட்சியே ‘எப்சி’ விஷயத்தில் இப்படி கவனக்குறைவாக செயல்படலாமா? இதுபோல், 23 எல்சிவி வானங்களை எப்சி வாங்கவில்லை. வாகன பராமரிப்பு உதவிபொறியாளர் ரிச்சர்டு; எப்சி பெறாமல் இருப்பது உண்மைதான். எப்சி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

திமுக கவுன்சிலர் ஜெயராமன், ”மேயர் வார்டு மழைநீர் முழுவதும் என்னுடைய வார்டுக்குட்பட்ட ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்குள் வருகிறது. மழைக்கு முன்பே இப்பிரச்சனையை சரி செய்ய கூறியதால் ஆணையாளர் வந்தார். அவருடன் வந்த அதிகாரிகள், பொறுப்பாக குறிப்பெடுத்துக் கொண்டனர். ஆனால், ஆணையாளர் சென்ற பிறகு 28 நாட்களாகியும் இதுவரை அதிகாரிகளை வரவில்லை. இதுபோன்ற அதிகாரிகள் மாநகராட்சிக்கு தேவையில்லை. பொதுமக்களுக்கும், கவுன்சிலர்களுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் தேவையில்லை. அவர்களை ஆணையாளர் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி இடமாற்றம் செய்யுங்கள். உங்களுக்கு கவுன்சிலர்கள் நிற்பார்கள்” என்றார்.

கட்சி ஒப்புதலுடன் துணை மேயர் பேசினாரா? - ”மாநகராட்சிக் கூட்டங்களில் எப்போதுமே சாதுவாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் துணை மேயர் நாகராஜன், மாநகராட்சிக்கு எதிராக அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை, அந்தந்தத் துறைகளில் திரட்டப்பட்ட ஆதாரங்களுடன் பட்டியலிட்டார். ஒரு கட்டத்தில் அவருக்கு எதிராக மேயர் ஆதரவு கவுன்சிலர்கள் இருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து, திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, மேயர் அருகே அமர்ந்து கொண்டு இப்படி பேசக்கூடாது” என்றனர். ஆனால், மற்ற திமுக கவுன்சிலர்கள், துணை மேயர் குற்றச்சாட்டுகள் உண்மை என்பது போலவே ரசித்தனர். அவர்கள் எழுந்து எதிர்ப்பே தெரிவிக்கவில்லை. மேயர், ஆணையாளர் இருவரும் துணை மேயரின் குற்றச்சாட்டுகளை, எதிர்கொள்ள முடியாமல், விளக்கமளிக்க முடியாமலும் தடுமாறினர்.

கடந்த சில வாரமாக திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினரிடையே மோதல் வெடித்த நிலையில், துணை மேயர் அவரது கட்சி நிர்வாகத்தில் அனுமதி வாங்காமல் இப்படி பேச வாய்ப்பில்லை என்றும், முன் தயாரிப்புடன் திட்டமிட்டே கட்சி ஒப்புதலுடனே அவர் பேசியிருக்கிறார் என்றும் திமுகவினர் கூறுகின்றனர். இதுதொடர்பாக அவரிடம் கேட்டதிற்கு மக்கள் பிரச்சனைகளை முன் வைக்க கம்யூனிஸ்ட்கள் ஒரு போதும் தயங்கியதில்லை” என்றார்.

x