புதுச்சேரி பாஜகவில் 1.5 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்: மேலிடப் பொறுப்பாளர் வலியுறுத்தல்


புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பாஜகவில் 1.50 லட்சம் பேரை வரும் 31 ம் தேதிக்குள் புதிய உறுப்பினர்களாகச் சேர்க்கவேண்டும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா அம்மாநில பாஜகவினரை வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி பாஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த ஆகஸ்டில் தொடங்கியது. அதனடிப்படையில் 2 லட்சம் பேரை புதிய உறுப்பினர்களாகச் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான நிர்மல்குமார் சுரானா தலைமையில் இன்று நடைபெற்றது.

புதுச்சேரியில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு புதுவை மாநில உள்துறை அமைச்சரும், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான நமச்சிவாயம் தலைமை வகித்தார். அவர் புதிய உறுப்பினர்களை பாஜகவில் சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கினார்.

அதையடுத்து கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசுகையில், "பாஜக நிர்வாகிகள் தங்களது உறுப்பினர் பதிவை மீண்டும் புதுப்பித்துள்ளனர். அதையடுத்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது. தற்போது புதுவை மாநிலத்தில் பாஜகவில் 1.25 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

வரும் 31-ம் தேதிக்குள் 1.50 லட்சம் பேரை உறுப்பினர்களாகச் சேர்ப்பது அவசியம். அப்போதுதான் புதிய உறுப்பினர்களுக்கான சேர்க்கை இலக்கை எட்டமுடியும். புதிய உறுப்பினர்களில் கட்சியின் அதிதீவிர உறுப்பினர்கள் அடையாளம் காணப்படுவதும் அவசியம்” என்றார்.

கூட்டத்தில் புதுவை மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார், எம்எல்ஏ-க்கள் அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

x