மழை பெய்தால் சேறும் சகதியும்... வெயில் அடித்தால் புழுதி மயம்... இது புதுச்சேரி துயரம்!


மழை பெய்தால் சேறு சகதியாகவும், வெயில் அடித்தால் புழுதி மயமாகவும் புதுச்சேரி தற்காலிக பேருந்து நிலையம் இருக்கிறது. இங்கிருந்து புறப்படும் பேருந்துகள் கடலூர் சாலையில் செல்லும்போது அதிகளவில் தூசு பறந்து மக்கள் அவதி அடைகின்றனர்.

புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தை முழுவதும் இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.29 கோடியில் வணிக வளாகத்துடன் கட்டும் பணியை

கடந்த 2023 ஜூனில் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக, பேருந்து நிலைய மைய பகுதியில் இரும்பு தகடுகள் கொண்டு அடைக்கப்பட்டு வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கியது. இதற்கு பேருந்து நிலையப் பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள், ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து பேருந்து நிலையத்தை முழுமையாக காலி செய்து கொடுத்தால் மட்டுமே பணிகளை விரைந்து முடிக்க முடியும் என ஒப்பந்த நிறுவனம் தெரிவித்தது. தொடர்ந்து மக்களவைத் தேர்தலால் பணிகள் நடக்கவில்லை. தேர்தல் முடிவு வெளியான பிறகு கடந்த ஜூன் 16-ல் தற்காலிக பேருந்து நிலையத்தை ஏஎப்டி திடலுக்கு மாற்றிவிட்டு புதிய பேருந்து நிலையத்தை கட்ட முடிவு எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கின.

தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால் பேருந்துகள் அனைத்தும் இங்கு நிற்கின்றன. அத்துடன் மழை பெய்தாலே தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக மாறி மக்கள் கடும் அவதியடைகின்றனர். இதனால் நகராட்சி தரப்பு இங்கு மணலை கொட்டுகின்றனர். ஆனால் மழை விட்டதும் மணல் காய்ந்து வெயிலில் தூசு பறக்கத் தொடங்கிவிடுகிறது.

தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளின் டயர்களில் மணல் ஒட்டிக்கொண்டு புதுச்சேரி - கடலூர் சாலையெங்கும் மணலும், தூசியும் பறக்கிறது. இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் அதிக மணலால் சறுக்கி விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதற்கும் மேலே அதிக தூசி பறப்பதால் சுவாச கோளாறுகளினாலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “புதுச்சேரி தற்காலிக பேருந்து நிலையத்துக்கு போதிய வசதி செய்து தரவில்லை. பேருந்து நிலையம் முழுவதும் கற்காலத்துக்கு வந்ததை போல் காட்சி தருகிறது. மழை வந்தால் சேறு சகதியில் நடக்கிறோம். அதேநேரத்தில் வெயில் அடித்தால் தூசு பறந்து சுவாசிக்க முடியவில்லை. பேருந்து ஏற வருவோர் மட்டுமின்றி இச்சாலை வழியாக செல்வோர் அனைவரும் கடும் பாதிப்பில் உள்ளனர். தூசு பறந்து சுவாசிக்கவே முடியவில்லை. தற்காலிகம்தானே என அலட்சியப்படுத்தாமல் அடிப்படை வசதியையாவது அரசு செய்ய வேண்டும்” என்றனர்.

x