திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பரிவார மூர்த்தியாக சொர்ண ஆகர்ஷன பைரவர் உள்ளார்.
மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை, பாலபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி தேய்பிறை அஷ்டமி நாளான இன்று சிறப்பு அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷன பைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. திண்டுக்கல் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் இன்றைய தேய்பிறை அஷ்டமி பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.