தூங்கும் வசதியுடன் வந்தே பாரத் ரயில்கள் ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சென்னை ஐசிஎஃப் விளக்கம்


வந்தேபாரத் ரயிலின் உட்புறத் தோற்றம். படங்கள்: ம.பிரபு 

சென்னை: தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை ஐசிஎஃப் பொதுமேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.

நெடுந்தொலைவுக்கு இரவு நேரங்களிலும் வந்தேபாரத் ரயில்களை இயக்கும் விதமாக, தூங்கும் வசதி கொண்ட ரயில்களை தயாரிக்கும் பணி பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் கடந்த ஆண்டு தொடங்கி, செப்டம்பரில் முடிந்தது. தொடர்ந்து, சென்னை ஐ.சி.எஃப் ஆலைக்கு கொண்டுவரப்பட்டு, அங்கும் பலகட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், சென்னை ஐசிஎஃப் பொதுமேலாளர் சுப்பாராவ் நேற்று ரயிலை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் ஆய்வு பணிகள் நவ.15-க்குள் முழுமையாக முடிவடையும். அதன்பிறகு, லக்னோவுக்கு அனுப்பி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு மீண்டும் ஆய்வு செய்யும். குறிப்பாக, மணிக்கு 180 கி.மீ வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்படும். முழுமையான சோதனைகள் முடிந்து வரும் ஜன. 15-ம் தேதி ரயில்வே வாரியத்திடம் ரயில் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு, எந்த வழித்தடத்தில் ரயிலை இயக்குவது என்று ரயில்வே வரியம் முடிவு செய்யும். இந்த ரயில் வரும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, 60 ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. இவற்றில் 50 வந்தே பாரத் ரயில்களை சென்னை ஐசிஎஃப் தயாரிக்கிறது. இந்த ரயில்களில் விபத்தை தவிர்க்கும் விதத்தில், பாதுகாப்பு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கவச் தொழில்நுட்பம் இதிலும் உள்ளது. 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் ரூ.120 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக தூங்கும் வசதிகள் கொண்ட 24 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட உள்ளது. சென்னை ஐசிஎஃப்-ல் இந்த நிதியாண்டில் 3,500 பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. முதல் ஹைட்ரஜன் ரயில் வரும் மார்ச்சில் தயாரித்து வழங்கப்படும். தெற்கு ரயில்வேயில் இயக்குவதற்கு குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில் வரும் டிசம்பருக்குள் தயாரித்து வழங்கப்படும். வந்தேபாரத் சரக்கு ரயில் தயாரிப்பு பணியும் நடந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

சிறப்பம்சங்கள்: தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் மொத்தமாக 823 பேர் பயணம் செய்யலாம். அனைத்து பெட்டிகளிலும் தீ அணைப்பான் கருவி, அவசர கால ரயில் நிறுத்த பட்டன் உள்ளது. ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்வதற்கு தானியங்கி கதவுகள் உள்ளன. அவசர பேச்சுப் பிரிவு (Emergency Talk Back Unit) என்ற கருவி மூலம் லோகோ பைலட்டிடம் பயணிகள் பேச முடியும். சிசிவிடி கேமராக்கள், கழிவறை, சார்ஜிங் கேபிள் லைட் வசதி உள்ளன.

x