திமுக மீதான பொறாமையால் இபிஎஸ் விரக்தி; எந்த தேர்தலாக இருந்தாலும் திமுகவே வெல்லும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி


சென்னை: மக்களால் ஓரங்கட்டப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, திமுக மீதான பொறாமையால் விரக்தி அடைந்துள்ளதாகவும், 2026 சட்டப்பேரவை தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தலாக இருந்தாலும் திமுகதான் வெற்றி பெறும் என்றும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் மேலும் பேசியதாவது: திமுகவை பொறுத்தவரை, ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நாம் என்றைக்கும் இருப்போம், மக்களுக்காக பாடுபடுவோம், பணியாற்றுவோம் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அதனால்தான், 6-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள திமுக ஏராளமான திட்டங்களை, சாதனைகளை மக்களுக்காக செய்திருக்கிறது. மக்களால் போற்றப்படும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. ஆனால் மக்களால் ஓரங்கட்டப்பட்டுள்ள பழனிசாமி பொறாமையால், திமுக ஆட்சியின் செல்வாக்கு சரிவதாக தொடர்ந்து பேசிவருகிறார். அதோடு மட்டுமின்றி, திமுக கூட்டணி விரைவில் உடையப்போகிறது என்றும் ஜோசியராகவே மாறி பேசியுள்ளார். விரக்தியின் எல்லைக்கே போயிருக்கிறார். எங்கள் கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணியல்ல, பதவிக்கு வரவேண்டும் என்ற கூட்டணியும் அல்ல, எங்களுடையது கொள்கை கூட்டணி. கூட்டணிக்குள் விவாதம் நடக்கலாம், பேச்சுக்கள் நடக்கலாம். விவாதங்கள் நடப்பதை பார்த்து விரிசல் ஏற்பட்டுவிட்டதாக யாரும் கருதிவிடக் கூடாது. விவாதங்கள் இருக்கலாமே தவிர விரிசல் ஏற்படவில்லை; விரிசலும் ஏற்படாது.

தன்னுடைய கட்சியை எப்படி வளர்ப்பது என்பதை பார்க்காமல், வளர்ந்து கொண்டிருக்கும் கட்சியை, அரசை பார்த்து பழனிசாமி குற்றம்சாட்டுகிறார். திமுகவைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ஆட்சியில் உள்ளபோதும் மழைக்காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்து செயல்படுகிறோம். சென்னையில் மழை வந்ததும் முதல்வராக நானும், துணை முதல்வராக உதயநிதியும், அமைச்சர்களும் வந்தோம். எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தெருத்தெருவாக வந்தனர். அதேபோல் ஊராட்சி, உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சியில் இருக்கக்கூடிய பிரதிநிதிகள் அத்தனைபேரும் மக்களைத் தேடி வந்தனர்.

குறைகளை கேட்டு பிரச்சினைகளை தீர்த்து வைத்தனர். ஆனால், மழை வந்ததும் சேலத்துக்கு சென்றுவிட்ட பழனிசாமி அதைப்பற்றி கவலைப்படமாட்டார். ஆட்சியில் இருந்த போதும், இல்லாத நேரத்திலும் அவர் வரமாட்டார். திமுகவைப் பொறுத்தவரைக்கும், கூட்டணி என்றால், அது கொள்கை கூட்டணியாக, மக்கள் கூட்டணியாக இருக்கிறது. 2026 மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுகதான் வெற்றி பெறும் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

x