சென்னையில் வீட்டுவசதி, அலுவலகத்துக்கான தளங்களை அதிகரிக்க தேவையான இடங்களில் தளப்பரப்பு குறியீட்டை அதிகரிப்பது குறித்து ஆலோசனை


சென்னை: சென்னை பெருநகரில் வீட்டுவசதி மற்றும் அலுவலக வசதிக்கான தளங்களை அதிகரிக்க தேவையான இடங்களில் கட்டுமானத்துக்கான தளப்பரப்பு குறியீட்டை உயர்த்தி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், சென்னையை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்கான, சென்னை இன்ஃப்ரா நெக்ஸ்ட் 2024 என்ற கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

கருத்தரங்கில், தொழிற்பேட்டைகளை நவீனப்படுத்துவது தொடர்பான வெள்ளை அறிக்கையை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: சென்னையை அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் உலகளவில் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றும் தொலைநோக்குத் திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது. இதற்காக சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக இருக்கும் நிலத்தை சரியான வகையில் பயன்படுத்துதல் இதில் முக்கியமானதாகும். முதல் முறையாக சென்னைக்கான 3-வது பெருந்திட்டம் தயாரிக்க பல்வேறு வகையான ஆய்வுகளை நடத்தியுள்ளோம். நாட்டில் முதல்முறையாக பொருளாதார வளர்ச்சிக்கான யுக்தி சென்னை பெருநகர பகுதிகளை முழுமையாக உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நகரத்தை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டங்களுடன், ‘காம்பாக்ட்’ நகரமாக உருவாக்க முடியும். தொழிற்சாலை, வீட்டுவசதி இவை எங்கு அமைய வேண்டும். எந்த நிலம் எதற்கு உகந்தது என்பதற்கான வரைபடம் உருவாக்கி, அதன் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் பொதுமக்கள் அடர்வு மற்றும் நில மதிப்புக்கு இடையிலான தொடர்பு குறித்து ஆய்வு செய்கிறோம். இவற்றின் அடிப்படையில், சிறந்த வாழ்க்கைக்கான, முதலீட்டுக்கான நகரமாக உருவாக்க பெரிய அளவிலான கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம்.

இதில் முக்கியமானது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். அதேபோல் கடற்கரைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில், எண்ணூர் முதல் கோவளம் வரையிலான பகுதியில் 8 கடற்கரைகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர 12 ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், தொழிற்சாலை, வீட்டுவசதி அடர்வை ஏற்படுத்துவதற்கான, பல்வேறு வழித்தடங்களும் கண்டறியப்பட்டு வருகின்றன. இதுதவிர, பல்வேறு வசதிகளுடன் கூடிய துணைக்கோள் நகரங்கள் அமைக்க, திருமழிசை, மீஞ்சூர் உள்ளிட்ட 6 புதிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில், சிறந்த தரமான வாழ்க்கைக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. சென்னையில் அடுத்த 10 ஆண்டுகளில் 20 சதவீதம் மக்கள் தொகை உயரும்போது, மக்கள் எங்கு வாழ்வார்கள் என்பதை கவனிக்க வேண்டும். எனவே, இதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

ஐடி உள்ளிட்ட தொழில் துறையில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் வீட்டு வசதித் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், சிஐஐ தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் ஸ்ரீவத்ஸ்ராம், சென்னை மண்டல தலைவர் மிலன் வாஹி, துணைத் தலைவர் அஜித் சோர்டியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x