14 மாவட்டங்களில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை எண்ணிக்கையில் பெரும் முரண்பாடு: மறு ஆய்வுக்கு உத்தரவு


மதுரை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்பு பாதுகாப்புக் குழுவில் பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர் ஜனார்த்தனன். இவர், கரோனா காலத்தில் இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் வரம்புக்குஉட்பட்ட 14 மாவட்ட நீதிமன்றங்களில், கடந்த ஓராண்டில் தாக்கலான குற்றப்பத்திரிகைகள் மற்றும் இறுதி அறிக்கைகளின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

இந்த மனு நீதிபதி கே.முரளி சங்கர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட முதன்மை நீதிபதிகள் மற்றும் காவல் துறை தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் நீதிபதி, "நீதி, காவல்துறை தாக்கல் செய்த அறிக்கைகளின்படி, குற்றப்பத்திரிகைகளின் எண்ணிக்கைகளில் வேறுபாடு உள்ளது. 14 மாவட்ட முதன்மை நீதிபதிகளின் அறிக்கையின்படி 2 லட்சத்து, 2694 குற்றப்பத்திரிகைகள் கடந்த ஓராண்டில் தாக்கலாகியுள்ளன. 14 ஆயிரத்து 650 குற்றப்பத்திரிகைகள் விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையின் அறிக்கையின்படி ஒரு லட்சத்து 44 ஆயிரம் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு, 42 ஆயிரத்து 12 குற்றப்பத்திரிகைகள் விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காவல் துறை அறிக்கையை மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும், நீதித் துறை அறிக்கையை காவல் துறைக்கும் உயர்நீதிமன்ற பதிவுத் துறை அனுப்பிவைக்க வேண்டும். அது தொடர்பான கருத்துகளை நீதித் துறையும்,காவல் துறையும் அக். 25-ம் தேதிக்கு முன்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக். 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.

x