தீவிர புயலாக வலுப்பெறுகிறது ‘டானா’ - கோவை, சேலம் உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்று ஒடிசா மாநிலம் பாராதீப்புக்கு தென்கிழக்கே 520 கி.மீ., மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு தென்கிழக்கே 600 கி.மீ., வங்கதேச நாட்டின் கேப்புப்பாராவுக்கு தென்கிழக்கே 610 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த புயலுக்கு ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ளது.

இது இன்று தீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், புரி - சாகர் தீவுகளுக்கு இடையே இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கக்கூடும். அப்போது, இப்பகுதிகளில் மணிக்கு 100 - 110 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (அக்.24) ஒருசில இடங்களிலும், நாளை (அக்.25) முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

x