6% சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு: கோவை மாநகராட்சி கூட்டத்தில் சிபிஎம் கவுன்சிலர்கள் வெளிநடப்பு முயற்சி


கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று நடந்த மன்றக்கூட்டத்தில் பங்கேற்ற மேயர் கா.ரங்கநாயகி, ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்.

கோவை: கோவை மாநகராட்சியில் சாதாரண மன்றக்கூட்டம், பெரியகடைவீதி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள, விக்டோரியாக கூட்டரங்கில் இன்று (அக்.23) நடைபெற்றது.

மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதுமே 6 சதவீத சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கவுன்சிலர்கள் தொடர்ந்து மேயரை நோக்கி வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் பேசும்போது, "அதிமுக ஆட்சியில் மாமன்ற கூட்டத்தை அரை மணி நேரத்தில் முடித்து விடுவார்கள். மாநகரில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகாிக்க, அதிமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததே காரணமாகும். பருவமழைக் காலம் தொடங்கும் முன்னரே கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரியிருக்க வேண்டும். தற்போது தூர்வாரி கழிவுகளை அங்கேயே கொட்டி விடுகின்றனர்.

மீண்டும் பெய்யும் மழையில், கழிவுகள் சாக்கடையில் கலந்து விடுகின்றன. தொடர்ந்து பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடைகளில் இருந்து வெளியேறி சாலைகளில் வழிந்தோடுகிறது. பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய்களை பிடிக்கும் போது கவுன்சிலர்களின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்" என்று கவுன்சிலர்கள் கூறினர்.

அதிமுக மற்றும் சிபிஎம் கவுன்சிலர்கள் பேசும்போது, "6 சதவீத சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும். ஈஷாவுக்கு ஒதுக்கப்பட்ட மின்மயமான பராமரிப்பு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்" என்றனர்.

தொடர்ந்து மேயர் ரங்கநாயகி பேசும்போது, "மக்கள் மீது தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. சொத்து வரி உயர்வு தொடர்பாக ஏப்ரல் 11ம் தேதி 2022ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக கலந்து ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும்" என்றார்.

மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பேசும்போது,"தெரு நாய்களை பிடிப்பது தொடர்பாக அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடம் தெரிவித்து அவர்களின் கையெழுத்து பெறுவது அமல்படுத்தப்படும். தெரு நாய்களை கொல்ல முடியாது. தெரு நாய்களை கட்டுப் படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அந்த தெருநாய்கள் எங்கு பிடிக்கப்பட்டதோ அந்த பகுதியிலேயே விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு குப்பைகளை கொண்டு செல்லக்கூடாது என்று தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. குப்பைக் கிடங்கில் தற்போது எவ்வளவு கலப்புக் குப்பை உள்ளது எனக் கண்டறிய சர்வே செய்யப்படும், தொடர்ந்து அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

முன்னதாக, கூட்டம் தொடங்கியதும் சிபிஎம் கவுன்சிலர் ராமமூர்த்தி 6 சதவீத சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பின்னர், இக்கோரிக்கையை வலியுறுத்தி சிபிஎம் கவுன்சிலர்கள் சபையை விட்டு வெளிநடப்பு செய்ய முயன்றனர். திமுக கவுன்சிலர்கள் அவர்களை சமாதானம் செய்ததைத் தொடர்ந்து மீண்டும் அவர்கள் தங்களது இருக்கைகளில் வந்து அமர்ந்தனர்.

x