கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே 750 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, பேரிகையை ஒட்டிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். கணிமங்கலம் என்ற ஊரில் மேற்கொண்ட ஆய்வின்போது, கிருஷ்ணகிரி அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவகுமார், திருமலைக் கோயில் மைதானத்தில் மாடு கட்டிவைக்கப்பட்ட இடத்தில் பழமையான கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்தார்.
அக்கல்வெட்டை அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியர் கோவிந்தராஜ் படித்துக் கூறியதாவது: “பூர்வாதராயர்கள் என்னும் குறுநிலத் தலைவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற சிற்றரச பரம்பரையினர் ஆவர். இவர்கள் பிற்கால சோழர்கள் காலத்தில் சிறு தலைவர்களாய் இருந்து ஒய்சாளர்களின் காலத்தில் ஓசூரை சுற்றியுள்ள பகுதிகளை ஆளும் மகாமண்டலீஸ்வரர்களாக இருந்தனர்.
இவர்கள் சின்னக்கொத்துார், மேல்சூடாபுரம், பேரிகை போன்ற இடங்களில் உள்ள கோயில்களைக் கட்டியும், அவற்றிற்கு பல்வேறு தானங்களையும் வழங்கியுள்ளனர். இந்த பூர்வாதராயர்களில் ஒரு முக்கிய தலைவர் தான், பூமிநாயக்கன் என்பவன். இவரால் நிறுவப்பட்ட கல்வெட்டு தான் இது. இவர் இப்பகுதியின் மகாமண்டலீஸ்வராக இருந்தபோது கணிமங்கலம் என்ற ஊருக்கு பூமிநாயக்க சதுர்வேதிமங்கலம் என தனது பெயரை வைத்து அதனை பிராமணர்களுக்கு தானமாக வழங்கிய செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
இன்றும் இக்கிராமத்திற்கு 750 ஆண்டுகளுக்கு முற்பட்ட கணிமங்கலம் என்ற பெயரே எவ்வித மாற்றமும் இன்றி வழங்கப்பட்டு வருவது சிறப்பாகும். இவ்வூரைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் அப்போதைய அத்திசமுத்திரத்தில் (தற்போது அச்சேந்திரம் என்று வழங்கப்படுகிறது) உள்ள பெருமாள் கோயிலுக்கு தானம் வழங்கியுள்ளதை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
இன்றும் இவ்வூரில் கோட்டை என்ற பகுதி இருப்பதை அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து நாங்கள் இப்பகுதியில் மேற்கொண்டுவரும் கள ஆய்வுகள் மூலம், இம்மாவட்ட வரலாற்றினை முழுவதுமாய் அறிந்துக் கொள்வதற்கான தடயங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.