மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் பஜார் வீதியில் அமைந்துள்ள சார்பதிவார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் பத்திரப் பதிவு செய்ய வந்தவர்களிடமும் அலுவலகத்திலும் திடீர் சோதனை மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பஜார் வீதியில் சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, நாள்தோறும் வீட்டுமனைகள் உள்பட பல்வேறு பத்திரப் பதிவுகள் நடைபெற்று வருகின்றன. பதிவாளர் இன்று விடுமுறையில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையைச் சேர்ந்த 8 பேர் கொண்டு குழுவினர், அச்சிறுப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்ற மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மாலை 4 மணிக்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் இடம் மற்றும் வீடு தொடர்பாக பதிவு செய்ய அலுவலகத்துக்கு வந்த நபர்களிடம் சோதனை நடத்தி அதன் பிறகு அவர்களை வெளியே அனுப்பினர். இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் விசாரித்த போது, "பொதுமக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனைகள் முழுமையாக முடிந்த பிறகு விவரங்கள் தெரிவிக்கப் படும்" என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறினர்.