புதுச்சேரி: மருத்துவமனை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என புதுச்சேரி முதல்வரை அம்மாநில அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுச்சேரி மாநிலத்தில் கடந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்து தற்போது வரை கடந்த 8 ஆண்டுகளாக மக்களுக்கு இலவச அரிசி வழங்காமல் அதற்கு பதிலாக வங்கியில் பணமாக செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், அதிமுகவின் பல்வேறு போராட்டங்கள், துணை நிலை ஆளுநர்களிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் காரணமாக தற்போது ரேஷன் கடை திறக்கப்பட்டு பண்டிகை கால அரிசியும், சர்க்கரையும் வழங்கப்பட்டு வருகிறது. துணைநிலை ஆளுநரின் பொறுப்புமிக்க செயலுக்கு அதிமுக சார்பில் வாழ்த்துகளும், முதல்வருக்கு நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த 8 வருடங்களாக மூடப்பட்ட ரேஷன் கடைகள் உடனடியாக திறப்பதில் உள்ள சிரமத்தை மனதில் கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் அங்கன்வாடிகள் மூலம் இலவச அரிசியும் சர்க்கரையும் வழங்க அரசு முன்வர வேண்டும். இலவச அரிசி, சர்க்கரை வழங்குவதில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் அதிகாரிகள் நேரடியாக பொதுமக்களுக்கு அரிசியும், சர்க்கரையும் வழங்க வேண்டும்.
தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு அரசு சார்ந்த மருத்துவமனைகள், நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இவ்வாண்டு போனஸ் வழங்க முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பல்வேறு தொழில்களை குறிப்பிட்டு கடந்த 3 மாதத்துக்கு முன்பு அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அரசு அறிவித்திருந்தது. அவ்வாறு அரசின் அறிவிப்பின்படி குறைந்தபட்ச ஊதியத்தை பெறக்கூடிய அத்தனை தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் போனஸை அரசு அறிவிக்க வேண்டும்.
பட்டியலின மக்கள் தங்களது உரிமைகளை பெறும் விஷயத்தில் ஆளும் அரசு இரட்டை வேடம் போடுகிறது. 1964-க்கு முன்பு தாய்வழியில் வசிக்கும் ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு உரிய சான்றிதழை உடனே வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் அரசாணையை வெளியிட வேண்டிய அரசு ஒவ்வொரு பிரச்சினையிலும் திட்டமிட்டு காலதாமதம் செய்வதால் பட்டியலின மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக தாய் வழியில் வசிப்பிடம் ஆதாரத்தை கருத்தில் கொள்ளலாமா, வேண்டாமா? என அரசு முடிவெடுக்க சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி அதில் நல்ல முடிவினை எடுத்து உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். '' இவ்வாறு அவர் தெரிவித்தார்.