தமிழக வெற்றிக் கழக மாநாடு இறுதிக் கட்டப் பணி மும்முரம் - கள நிலவரம் என்ன?


மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட்ட இடத்தில் கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம்: நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ம் தேதி மாலை நடைபெறவுள்ளது.

மாநாட்டுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகளை ஒப்பந்ததாரர்கள் இரவு பகலாக செய்து வருகின்றனர். இப்பணிகள் நாளை (அக்.24) நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டு முகப்பு வாயிலில் இருந்து மாநாட்டு திடல் வரும் வரை வழியின் இருபுறமும் 35 அடி உயரத்தில் 300-க்கும் மேற்பட்ட கொடி கம்பங்கள் நட்டு, அதில் 15 அடி உயரத்தில் கட்சிக் கொடியை பறக்க விடும் பணி நேற்று நடைபெற்றது.

மாநாட்டின் பாதுகாப்பு கருதி 700-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது மேலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டு, மாநாட்டுத் திடல் முழுவதும் பிரகாசமாக்கப்பட உள்ளது. இந்தப் பணிகளை சுமார் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர். 27-ம் தேதி பகல் 12 மணி முதல் தவெக தொண்டர்கள் மாநாட்டுத் திடலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

தற்போதே மாநாட்டு திடலை பார்க்கும் ஆர்வத்தில் பலர் வருகின்றனர். மாநாட்டு முகப்பு வாயிலில் பவுன்சர்கள் நின்று யாரையும் உள்ளே விடாமல் தடுத்து திருப்பி அனுப்பி வைக்கின்றனர். போலீஸார் மட்டும் மாநாட்டுத் திடல் உள்ளே சென்று, பணிகளை பார்வையிட்டு வருகி்ன்றனர்.

மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார் ஆய்வு செய்து, அவ்வப்போது விழுப்புரம் எஸ்பி தீபக் ஸ்வாச்க்கு தகவல் அனுப்பி வருகிறார்.

தீபாவளி வருவதால்.. இதற்கிடையே, தீபாவளியை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இருக்கின்றனர். அவர்களில் சிலர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று காலையே தங்களது வாகனங்களில் ஊருக்கு கிளம்பக் கூடும். விக்கிரவாண்டியில் இந்த மாநாடு நடைபெறும் சூழலில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் 27-ம் தேதி ஒரு நாள் மட்டும், திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி சாலை வழியாக கடலூர் சென்று அங்கிருந்து பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை வழியாக தென் மாவட்டங்களுக்கு வாகனங்களை அனுமதிக்கலாமா? மத்திய சென்னை, தென் சென்னையில் வசிப்பவர்களை கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் வழியாக செல்ல அனுமதிக்கலாமா?

தவெக தொண்டர்கள் விழுப்புரம், திண்டிவனத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் திருப்பி கீழகொந்தையில் உள்ள வாகன நிறுத்தம் வரை அனுமதித்து அங்கிருந்து மாநாட்டு திடலுக்கு நடந்துவர அறிவுறுத்தலாமா? அதே போல தென் மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்களை விக்கிரவாண்டி நகருக்குள் அனுமதித்து அங்கிருந்து வாகன நிறுத்தம் வரை அனுமதிக்கலாமா? என டிஎஸ்பி நந்தகுமார், கூடுதல் எஸ்பி திருமால், எஸ்பி தீபக் ஸ்வாச் ஆகியோர் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காவல்துறை சார்பில், இது குறித்த முறையான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று தெரிகிறது.

x