புதுச்சேரி: நாராயணசாமிக்கும் எனக்கும் அரசியல் ரீதியாக பல கருத்து வேறுபாடுகள் காங்கிரஸ் கட்சியில் இருந்த போதே இருந்தது. அங்கிருந்து வந்த பிறகும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடர்ந்து அவர் குற்றச்சாட்டு சொல்கிறார் என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "மாணவர்களுக்கான சீருடை, லேப் டாப், இலவச சைக்கிள் காலத்தோடு தருகிறோம். வெகு விரைவில் புத்தகப் பை, காலணியும் தரப்படவுள்ளது. இதற்கான டெண்டர் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. ஆசிரியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒரு வாரத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் 145 பேருக்கு மேல் பணியாணை தரவுள்ளோம்.
வெகு விரைவில் டிஜிடி ஆசிரியர்களுக்கான தகுதி பட்டியல் வெளியிடவுள்ளோம். தலைமை ஆசிரியர் கிரேடு 1, கிரேடு 2 பதவி உயர்வுத் தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். கல்வித்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாஹே கல்லூரி மாணவர் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். விரைவில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கூடுதல் போலீஸாரை பணியில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளோம். புதிதாக காவலர்களை பணிக்கு தேர்வு செய்துள்ளோம் அவர்களையும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சரி செய்ய பொதுப்பணித் துறை, காவல்துறை இணைந்து கூட்டம் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நானும், பொதுப்பணித்துறை அமைச்சரும் இணைந்து அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறோம். பாஜக மாநிலத் தலைவர் மீதான சம்மன் தொடர்பாக அவரை பதவியில் இருந்து மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை. தலைவர் மீது நம்பிக்கை உள்ளது.
அவர் சிறப்பான முறையில் கட்சியை வழி நடத்தி வருகிறார். பேரவைத் தலைவருடன் சுயேச்சை எம்எல்ஏ நேரு வாக்குவாதத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்க விஷயம். அவர் தன்னை இனியாவது மாற்றிக்கொள்ள வேண்டும். நாராயணசாமிக்கும் எனக்கும் அரசியல் ரீதியாக தொடர்ந்து பல கருத்து வேறுபாடுகள் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே இருந்தது.
அங்கிருந்து வந்த பிறகும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தொடர்ந்து அவர் என்மீது குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார். என் மீது தான் அவர் குற்றச்சாட்டு சொல்வார். அவர் சொல்வது உண்மையா, பொய்யா என மக்களுக்குத் தெரியும். ஆகவே மக்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்" என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.