சென்னை: தமிழக உணவுத் துறை சார்பில், பண்டிகைக் காலங்களை கவனத்தில் கொண்டு 15 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.499 என்ற விலையில்‘அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு’என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னை கோபாலபுரம் அமுதம் மக்கள் அங்காடியில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி இந்த தொகுப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். மஞ்சள்தூள், உப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, புளி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வறுகடலைமற்றும் பெருங்காயத்தூள் ஆகியவை பொருட்கள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.
தொகுப்பு விற்பனையை தொடங்கி வைத்து அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:
இந்த தொகுப்பானது, முதற்கட்டமாக சென்னை கோபாலபுரம், அண்ணாநகர், கொளத்தூர் தொகுதியில் பெரியார் நகர் அமுதம் மக்கள் அங்காடிகளிலும், அடையார், சூளைமேடு, சிந்தாதிரிப்பேட்டை, கே.கே.நகர், நந்தனம் ஆகிய பகுதிகளில் உள்ள 10 அமுதம் நியாய விலைக் கடைகளிலும் விற்பனை செய்யப்படும். ரூ.650 வரை விலை கொண்ட பொருட்கள் மக்கள் நலன் கருதி ரூ.499-க்கு விற்கப்படுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 50 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. மாநிலத்தில் 100 அமுதம் அங்காடிகள் திறக்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் விரைவில் திறக்க உள்ளோம். கோபாலபுரம் அமுதம் அங்காடியை நவீனப்படுத்துவதற்கு முன்பு, தினசரி வியபாரம் ரூ.50 ஆயிரமாக இருந்தது. தற்போது ரூ.2 முதல் ரூ.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவற்றை தரமாக வழங்கி வருகிறோம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முதல்வரின் அறிவுறுத்தலை ஏற்று, டெல்லி சென்று மத்திய உணவுத்துறை அமைச்சரிடம் தமிழகத்துக்கு மாதம் வழங்கப்படும் 8 ஆயிரம் டன் கோதுமையை 25 ஆயிரம் டன்னாக உயர்த்தி தர கோரினோம். அக்டோபர் முதல் 17,100 டன்னாக உயர்த்தி தந்துள்ளனர்.
கடந்தாண்டு சிறுதானிய ஆண்டாக ஐநா சபை அறிவித்த நிலையில், அரிசிக்கு பதில் சிறுதானியங்களை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் நீலகிரி, தருமபுரியில் அரிசிக்கு பதில் 2 கிலோ கேழ்வரகு வழங்கி வருகிறோம். மேலும், தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் 4 ஆயிரம் இடங்களில் செயல்படுகின்றன. 4 லட்சம் டன்நெல்லை பாதுகாப்பாக சேமிக்கரூ.300 கோடிக்கு சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. தீபாவளிக்கு நியாயவிலைக் கடைகளில் தங்கு தடையின்றி பொருட்கள்கிடைக்கும் என்று கூறினார். உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.