மதுரை: கர்நாடக மாநிலம் பிடுதியைச் சேர்ந்த நித்தியானந்தாவின் சீடர் சுரேகா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கணேசன் என்பவருக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை, நித்யானந்தாவின் அறிவுறுத்தலின்பேரில் அபகரிக்க முயன்றதாக என் மீதும், தர்மலிங்கம், ரதி ஆகியோர் மீதும் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் போலீஸார்வழக்கு பதிவு செய்துள்ளனர். எங்கள் மீது பொய்யான புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து, புகார்தாரர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “இடத்தின் உரிமையாளர் கணேசன் ஏற்கெனவே நித்தியானந்தா வழக்கில் அரசு தரப்புச் சாட்சியாக உள்ளார். மைசூர் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. கணேசனை நித்தியானந்தாவின் சீடர்கள் அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, முன்ஜாமீன் வழங்கக் கூடாது” எனக் கூறப்பட்டிருந்தது.
பின்னர் நீதிபதி, “நித்தியானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு, இந்திய நீதித் துறைக்கு சவால் விட்டு வருகிறார். அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடியாணை உள்ளது. அவர் நீதி மன்றத்தில் ஆஜராவதில்லை. ஆனால், அவரது சொத்துகளை நீதித்துறைப் பாதுகாக்க வேண்டுமா? மனுதாரர் வழக்கறிஞராக இருப்பதால், சம்பந்தப்பட்ட இட விவகாரத்தில் இனி தலையிட மாட்டேன் என உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்தால், முன் ஜாமீன் வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும். விசாரணை அக். 23-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்