திமுக கூட்டணியில் புகைச்சல்: அதிமுக பொது செயலாளர் பழனிசாமி விமர்சனம்


சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி.

மேட்டூர்: திமுக கூட்டணிக்குள் புகைச்சல் தொடங்கிவிட்டது. கூட்டணிக் கட்சிகள் கைவிட்டால் திமுக கீழே விழுந்து விடும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பழனிசாமி பேசியதாவது: மக்களவைத் தேர்தல் வேறு, சட்டப்பேரவைத் தேர்தல் வேறு.வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றிபெற்று, சரித்திர சாதனை படைக்கும். திமுக கட்சி பலமாக இல்லை.கூட்டணி பலத்தையே நம்பியுள்ளது. கூட்டணிக் கட்சிகள் கைவிட்டால், திமுக கீழே விழுந்துவிடும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்துள்ளோம்.

திமுகவில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது. மீண்டும் மன்னராட்சியை கொண்டுவரத் துடிக்கிறார்கள். ஆனால், அதிமுகவில்சாதாரண தொண்டனும் உயர்ந்தபதவிக்கு வர முடியும். கருணாநிதிகுடும்பத்தில் பிறந்ததால்தான் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. ஆனால், 50ஆண்டுகள் கட்சிக்காக உழைத்து, படிப்படியாக உயர்ந்ததால்தான் எனக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைத்தது.

திமுகவில் மூத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு பதவிகொடுத்திருக்கிறார்கள். உதயநிதிக்கு எந்த அனுபவமும் இல்லை.மிசாவில் சிறைக்குச் சென்ற வேறு யாருக்கும் துணை முதல்வர் பதவியை வழங்கவில்லை. இவ்வாறு பழனிசாமி பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில் பெரும்பாலான அமைச்சர்கள் பெரிய அளவிலான ஊழலில் ஈடுபட்டுள்ளனர். 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும், ஊழல் பட்டியல் தயாரிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது என்கிறார்கள். ஆனால்,கூட்டணிக்குள் புகைச்சல் தொடங்கிவிட்டது. அதிமுக கூட்டணி குறித்து தேர்தலின் போதுதான் கூற முடியும். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். முன்னணி நடிகர் விஜய்-க்கு ரசிகர் பட்டாளம் உள்ளது. பொது சேவையாற்ற வேண்டுமென்ற விருப்பத்தின் அடிப்படையில் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

அவர்களது மாநாடு வெற்றி பெறவாழ்த்துகிறேன். விஜய் கட்சிமாநாட்டுக்கு அனுமதி கொடுப்பதில் கெடுபிடி காட்டப்படுகிறது.பொதுக்கூட்டமோ, மாநாடோ எதற்கும் அனுமதி மறுப்பதுதான் திமுகவின் நோக்கம். கூட்டணி ஆட்சி குறித்து யூகத்தின் அடிப்படையில் பதில் அளிக்க முடியாது. இவ்வாறு பழனிசாமி கூறினார்.

x