போடி: அடிக்கடி ஏற்படும் மண்சரிவு மற்றும் காலநிலை மாற்றத்தால் போடிமெட்டு மலைச்சாலையின் ராட்சத பாறைகளில் ஏற்பட்ட பிளவுகள் பெரிதாகி உள்ளன. சிதிலமடைந்த இப்பாறைகள் சரிந்து விழும் அபாய நிலையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் இந்தச் சாலையில் இரவு பயணத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தமிழகம் - கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இந்த வனப்பாதை அமைந்துள்ளது. மலையடிவார பகுதியான முந்தலில் இருந்து 20 கி.மீ. நீளத்துக்கு இந்த மலைப்பாதை உள்ளது. சாலையின் ஒருபக்கம் செங்குத்தான கற்பாறைகளும் மறுபக்கம் பள்ளத்தாக்குகளும் உள்ளன.
ஆங்கிலேயர் காலத்தில் குறுகலாக அமைக்கப்பட்ட இச்சாலை அடுத்தடுத்து 18 அடியாக அகலப்படுத்தப்பட்டது. தற்போது 24 அடியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் வெடி வைத்து இப்பாதை அகலப்படுத்தப்பட்டது. இதனால் பல இடங்களில் ராட்சத பாறைகளில் கீறல்கள் ஏற்பட்டதுடன், கெட்டியாக இருந்த மண்திட்டுகளும் இலகு தன்மையாக மாறிவிட்டது. ராட்சத மரங்கள் வேருடன் சரிந்து விழுந்ததால் அப்பகுதியின் பிடிப்புத்தன்மையும் வெகுவாய் குறைந்தது.
ஆகவே, மழைகாலங்களில் இச்சாலையில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. பாறைகளில் ஏற்பட்ட கீறல்கள் அழுத்தம், மண்சரிவு மற்றும் வெயில், மழை போன்ற காலநிலை மாற்றத்தால் பிளவுகளாக மாறிவிட்டன. இந்த பிளவுகளும் பெரிதாகி அபாயகரமான நிலையில் உள்ளது. இதனால் ராட்சத பாறைகளின் ஒவ்வொரு பகுதிகளும் அவ்வப்போது சரிந்து விழுந்து வருகின்றன. எஞ்சிய பகுதிகள் பிடிப்புத்தன்மை குறைந்த நிலையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
இதனால் எந்த நேரமும் இவை சரிந்து விழும் அபாயம் உள்ளது. குறிப்பாக, 3, 4, 5, 8-வது கொண்டை ஊசி வளைவுகள் அருகே இதுபோன்ற சிதிலமடைந்த பாறைகள் அதிகம் உள்ளன. இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ''மழை நேரங்களில் மண், பாறை சரிவுகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. ஆகவே, டூவீலர்களில் செல்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசத்துடன் பயணிக்க வேண்டும். வாகனத்தில் செல்பவர்கள் முடிந்த வரை மழை மற்றும் இரவு நேரங்களில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து பணியாளர்கள் மூலம் இந்த வனப்பாதை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மண், பாறைகள் சரிந்தால் உடனடியாக அவற்றை அகற்றுவதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன'' என்றனர்.