பல்லாவரம்: பல்லாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.வெ.கணேசன், மருந்துகள் கையிருப்பு குறித்தும், அங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தொழிலாளர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், மருந்து மாத்திரைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளதா என்பது குறித்தும் தொழிலாளர்களுக்கான குடிநீர் வசதி, கழிவறை வசதி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தோல் தொழிலாளர்கள் நிறைந்த பல்லாவரத்தில் பொதுமக்களுக்கு சத்து மருந்துகளை அதிக அளவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். தொடர்ந்து, கோப்புகளை ஆய்வு செய்த அவர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர், மருத்துவமனை வளாகத்தை சுற்றிப் பார்த்த அமைச்சர், அங்கு குப்பைக் கழிவுகள் இருந்ததை கண்டு உடனடியாக தாம்பரம் மாநகராட்சி அதிகாரிக்கு தொடர்பு கொண்டு அந்த குப்பைக் கழிவுகள் எல்லாம் உடனடியாக அகற்றித் தருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது, “இது உத்தரவில்லை... எனது அன்பான வேண்டுகோள்” என மாநகராட்சி அதிகாரிக்கு அமைச்சர் வேண்டுகோள் வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின்போது இஎஸ்ஐ மருத்துவமனைகளின் இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர். அமைச்சர் கேட்டுக்கொண்டபடி உடனடியாக மாநகராட்சி சார்பில் அங்கு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.