திருபுவனம் திகோ சில்க்ஸ் உரிய போனஸ் வழங்க வேண்டும்: நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், திருபுவனம் திகோ சில்க்ஸில் தீபாவளியையொட்டி கடந்தாண்டைப் போலவே இந்த ஆண்டும் போனஸ் மற்றும் பங்குத்தொகைக்கான வட்டி வழங்க வலியுறுத்தி நெசவாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருபுவனம் பட்டு கூட்டுறவுச் சங்கம் எனும் திகோ சில்க்ஸில் சுமார் 1,800 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது, 38 சதவீத போனஸ் மற்றும் 14 சதவீதம் பங்குத்தொகைக்கான வட்டி வழங்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு 10 சதவீத போனஸ் மற்றும் 8 சதவீத பங்குத்தொகைக்கான வட்டி வழங்குவதாக, திகோ சில்க்ஸ் நிர்வாகம் அறிவித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த நெசவாளர்கள் கடந்தாண்டைப் போலவே போனஸ் மற்றும் பங்குத் தொகையை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திகோ சில்க்ஸ் நெசவாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு சார்பில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி, திகோ சில்க்ஸ் நிறுவனத்திற்குள், திகோ சில்க்ஸ் நெசவாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு கவுரவத் தலைவர் சா.ஜீவ பாரதி தலைமையில், தலைவர் வி.நாகேந்திரன், செயலாளர் பி. உதயகுமார் மற்றும் உறுப்பினர்கள் இன்று காலை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். இதனையறிந்த திகோ சில்க்ஸ் நிர்வாகம், “கடந்தாண்டைப் போலவே, இந்த ஆண்டும் போனஸ் மற்றும் பங்குத்தொகைக்கான வட்டி வழங்கப் படும். ஆகவே, போராட்டத்தைக் கைவிட்டுச் செல்லுங்கள்” எனத் தெரிவித்தது.

ஆனால், நெசவாளர்கள், நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “திருபுவனத்தில் உள்ள நெசவாளர்கள் தறியையும், திகோ சில்க்ஸ் நிறுவனத்தையுமே நம்பி வாழ்ந்து வருகின்றோம். ஆனால், திடீரென குறைவான போனஸ் மற்றும் பங்குத்தொகைக்கான வட்டி வழங்குவதாக அறிவித்ததால் மனவேதனையை அடைந்துள்ளோம். அதனால் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.

இதையடுத்து, சென்னையில் உள்ள உயரதிகாரிகள், வாய்மொழியாக கடந்தாண்டைப் போலவே போனஸ் வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால், நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக வழங்கும் வரை தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என நெசவாளர்கள் தெரிவித்தனர்.

x