கும்பகோணம்: திருமங்கலக்கோட்டையில் பயிர்களுடன் வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கும்பகோணம்: ஒரத்தநாடு வட்டம், திருமங்கலக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதுமே கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரத்தநாடு வட்டம், திருமங்கலக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மழையால் சேதமடைந்து வயலில் சாய்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை நீர் வடிவதற்கு வடிகால் வாய்க்கால் முறையாக இல்லாததால் வயல்களில் தண்ணீர் தேங்கி, பயிர்கள் மிதந்து தற்போது அழுகி, நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வேளாண்துறை அலுவலர்களிடம் தகவல் அளித்தனர்.

ஆனால், வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களை ஆய்வு செய்ய வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களை உடனே ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமையிலான விவசாயிகள், அழுகி மற்றும் முளைத்த நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி வயலில் இறங்கி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக தகவலறிந்த ஒரத்தநாடு வேளாண்துறை உதவி இயக்குநர் கணேசன் மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்வது தொடர்பாக விவசாயிகளுக்கும் அதிகாரிகளுகும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பாதிப்பு குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஒரத்தநாடு வேளாண்மை உதவி இயக்குநர் கணேசன் நம்மிடம் பேசுகையில், "ஒரத்தநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பயிர்களின் கணக்கெடுப்பு முடிந்த பிறகு மாவட்ட நிர்வாகத்திற்குத் தெளிவுப்படுத்தி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

x