பயிர் காப்பீடுக்கு பதிவு செய்யும் தேதியை நீட்டிக்க வேண்டும் - தஞ்சை விவசாயிகள் வலியுறுத்தல்


விவசாயிகள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், பயிர் காப்பீடு பதிவு செய்யும் தேதியை நீட்டிக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். இதில் அரசுத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் வருமாறு; பூதலூர் ஜீவக்குமார்: பூதலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல் அதிகமாகி வருகிறது. ஆனால், போதிய கால்நடை மருத்துவர்கள் இல்லாததாலும், வழிபாட்டு முறைகளைச் செய்து வருவதாலும் கால்நடைகள் உயிரிழக்கின்றன. எனவே, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கால்நடைகளைக் காப்பாற்ற வேண்டும்.

பயிர் காப்பீடு செய்ய நவ. 15-ம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் நவ. 15-ம் தேதிக்கு மேல் சாகுபடி பணி மேற்கொள்ள உள்ளதால், பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும். கட்டளை மற்றும் உய்யக்கொண்டான் வாய்க்காலை மூடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த வாய்க்காலை மூடக்கூடாது. மேலும், இது தொடர்பாக கருத்தறிய இன்றைய கூட்டத்துக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் வராததால், அடுத்த கூட்டத்திற்காவது அவர்களை வரவைக்க உத்தரவிட வேண்டும்.

வேங்கராயன்குடிகாடு வைத்தியலிங்கம்: வேங்கராயன்குடிகாடு சாலையைச் சீர் செய்ய வேண்டும், தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை சீர் செய்ய வேண்டும். திருக்கானூர்பட்டி ஆரோக்கியசாமி: திருக்கானூர்பட்டியில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடை சேதமடைந்துள்ளது. அதனால் ஏற்கெனவே, அந்த ரேஷன் கடை இயங்கி வந்த இடத்திலேயே புதிய ரேஷன் கடையை கட்டித்தர வேண்டும்.

தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 2024-25-ம் ஆண்டுக்குரிய அரவைப் பருவத்தை டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகை வழங்க அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இதே போல் சர்க்கரை ஆலையில் சீனி தயாரிப்பதைக் குறைத்து நாட்டுச் சர்க்கரை தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும்.கார்த்திகை பட்டம் கடலை சாகுபடி மேற்கொள்ள இருப்பதால் வேளாண்மை மையங்களில் கடலை விதைகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு தொகுப்பு திட்டம் வழங்கினால் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

திருப்பூந்துருத்தி சுகுமாறன்: கீழத்திருப்பூந்துருத்தியில் சட்ட விரோதமாக நீர் நிலைகளை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும், திருவையாறு பேரூராட்சி பகுதியில், பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் 1950-ம் ஆண்டுக்கு முன்பு உள்ள வருவாய்த்துறை ஆவணங்களின்படி அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

திருவையாறு உட்கோட்டத்தில் சம்பா, தாளடி சுமார் 90 சதவீதம் நிறைவுற்ற நிலையில், உரிய நேரத்தில் இடு பொருட்கள் வழங்காத அதிகாரிகள், அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிப் பகுதியில் குடமுருட்டி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் கொட்டி எரிப்பதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் நீர்வளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுப்படுகை குடமுருட்டி ஆற்றின் இடது கரை சுவாமி செல்லும் பாதையில் தார்ச் சாலை அமைத்துத் தரவேண்டும்.

வெள்ளாம்பெரம்பூர் துரை ரமேஷ்: காவிரியில் இருந்து பிரியும் கோணக்கடுங்கலாறு, இதில் இருந்து பிரியும் நரிக்கடுங்கலாறு மற்றும் வெண்ணாற்றில் இருந்து பிரியும் ரெட்டை வாய்க்கால், பிள்ளை வாய்க்கால்களில் ஆகாயத் தாமரை, வள்ளிக்கொடி, சம்பு போன்றவைகள் படர்ந்துள்ளதால், வயலில் தேங்கும் நீர் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் உள்ளது. எனவே, நீர்வளத்துறையினர், கள ஆய்வு மேற்கொண்டு, வாய்க்கால்களை தூர் வார வேண்டும். சம்பா, தாளடி சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருவதால், தட்டுப்பாட்டில்லாமல் உரம் வழங்க வேண்டும்.

கோனேரிராஜபுரம் வீரராஜேந்திரன்: திருவையாறு வட்டம், கருப்பூரில் உள்ள தலை மதகு சாலையின் ஓரத்தில் இருப்பதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகின்றன. இதனை அதன் அருகிலேயே இடமாற்றி அமைக்க வேண்டும்.

பெரமூர் அறிவழகன்: நெல் கொள்முதலின் போது நெல்லின் ஈரப்பதத்தைக் கூடுதலாக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். விவசாயிகளிடம் இருந்து கணினி சிட்டா போன்ற புதிய ஆவணங்கள் கேட்டு அலைக்கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

திருப்பழனத்தில் நூலகச் சாலை 3 ஆண்டுகளாக சீர் செய்யாமல் இருப்பதை உடனடியாக சீர் செய்ய வேண்டும். கரும்பு சாகுபடி செய்த போது, நோய் தாக்கி பல வருடங்களாகக் கரும்பு சாகுபடி மேற்கொள்ளாமல் இருக்கின்றோம். அந்தப் பகுதியில் கரும்பு சாகுபடி மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துவைத்தனர். முன்னதாக, கூட்டம் தொடங்கியதும், விவசாயிகள் திரண்டு, இந்தக் கூட்டம் நடப்பது தொடர்பாக ஏராளமான விவசாயிகளுக்குத் தெரியவில்லை. அதனால் 9 விவசாயிகள் மட்டுமே பங்கேற்றுள்ளோம். இனி நடைபெறும் கூட்டத்திற்கு அனைத்து விவசாயிகளுக்கும் தகவல் அளிக்க வேண்டும் என குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

x