போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் மாணவர்கள் அகல் விளக்கு போன்று பிரகாசிக்க வேண்டும்: இறையன்பு பேச்சு 


விருதுநகர்: ''போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் மாணவர்கள் அகல் விளக்கு போன்று பிரகாசிக்க வேண்டும். ஒரு அகல் விளக்கால் ஆயிரம் விளக்குகளை ஏற்ற முடியும்'' என்று தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு பேசினார்.

விருதுநகர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் போதைக்கு எதிரான மாணவத் தூதுவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ''போதை ஒழிப்பு என்பதை தனி நபர் சார்ந்ததாக இல்லாமல் ஒரு இயக்கமாக உருவாக்க வேண்டும். உள்ளங்கையில் உலகம் வந்துவிட்டது. அதில் சரி தவறு எது என்பதை மாணவர்கள் பிரித்துப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். போதை விழிப்புணர்வை நாம் வெளிப்படையாக பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு சிறப்புரையற்றுகையில், ''போதைப் பொருள் புகைப்பவரின் வாழ்க்கையே புதைத்துவிடும். போதை பழக்கத்தால் மாணவர்கள் சிலர் வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். வெள்ளைத்தாள் போன்ற மாணவப் பருவத்தில் போதைப் பழக்கம் கிறுக்கல்கள் போன்றது. கடைசியில் அந்த காகிதம் கசக்கி எறியப்பட்டு விடுகிறது.

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் அது பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மற்றவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் மாணவர்கள் அகல் விளக்கு போன்று பிரகாசிக்க வேண்டும். ஒரு அகல் விளக்கால் ஆயிரம் விளக்குகளை ஏற்ற முடியும்.

ஒருவருக்குள் போதைப் பழக்கம் சாதாரணமாக உள்ளே நுழையும். ஒரு கூடாரத்திற்குள் நுழையும் ஒட்டகத்தின் தலையைப் போல. பின்னர், ஒட்டகம் முழுவதுமாக கூடாரத்திற்குள் நுழைந்து ஆக்கிரமித்து விடும். அது போல் போதைப் பழக்கமும் முழுமையாக ஒருவரை அடிமையாக்கி விடும். சிந்தனையையும் உடல் நலத்தையும் கெடுத்து விடும். உறவுகளை இழக்கச் செய்து விடும். நிகோட்டின் பழக்கம் உள்ளவர்கள் பலருக்கு நுறையீரல் மட்டுமின்றி சிறுநீரகங்கள், இதயம், முதுகெலும்பும் பாதிக்கப்படும். சிலருக்கு ரத்தக் கொதிப்பை அதிகரித்து உயிரைப் பறித்து விடும்.

போதைக்கு எதிரான தூதுவர்களான நீங்கள் தூய்மையானவராக இருக்க வேண்டும். அழுக்கான கைகளால் எந்த இடத்தில் உள்ள அழுக்கையும் சுத்தப்படுத்த முடியாது. நீங்கள் போதைப் பழக்கத்திற்கு உட்படாமலிருந்து உடன் படிக்கும் மாணவர்களுக்கும் சுற்றத்தாருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி, நற்பண்புகள், புத்தக வாசிப்பு போன்றவை மூளையை ஆரோக்கியமாக்கும். போதைப் பொருள் இல்லா தமிழகத்தை நீங்கள் உருவாக்க வேண்டும்'' என்றார்.

இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்டத்தில் போதைக்கு எதிரான தூதுவர்களாக உள்ள பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் மாணவ - மாணவியர் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

x