தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு பேரணி


தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இப்பேரணியின் போது கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜிநாதன் கூறியதாவது; "கடந்த 10 ஆண்டுகளாக மார்பக புற்று நோய் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் பிங்க் அக்டோபர் மாதம் கடைப்பிடித்து வருகின்றோம். உலகளவில் மார்பக புற்று நோய் அதிகரித்து வருவதால், வரும் முன் காப்பதே தீர்வாகும். மரபு சார்பு உள்ளிட்ட பல காரணிகள் மார்பகப் புற்று நோய் ஏற்படக் காரணமாக உள்ளன. பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் 30 சதவீதம் மார்பக புற்று நோயாகத் தான் உள்ளது.

இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க மருத்துவரின் முறையான பரிசோதனை, ஸ்கேன் மற்றும் மேமோகிராம் சிகிச்சை, நுண் ஊசியால் கண்டறிதல் ஆகிய சோதனைகளை உரிய கால இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் கடந்த 2022 முதல் 2024, செப்டம்பர் வரை மொத்தம் 68,605 பெண்களிடம் மேற்கொண்ட பரிசோதனையில் 258 பேருக்கு மார்பக புற்றுநோய் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

எனவே, பெண்கள், உடல் எடையைப் பராமரிக்க வேண்டும், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். புகை பிடிப்பது, மது அருந்துதல் கூடாது. அதிக கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்த்து, ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்று கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கூறினார்.

இந்த விழிப்புணர்வுப் பேரணி தஞ்சாவூர் ரயிலடியில் இருந்து தொடங்கி பிரதானச் சாலை வழியாக ராசா மிராசுதார் மருத்துவமனையில் நிறைவடைந்து. இதில் மருத்துவர்கள் ஜெகதீசன், ஜீவாராமன், முத்துநாயகம், ராமச்சந்திரன், கார்த்திகேயன், சுமதி ரவிக்குமார் மற்றும் மருத்துவ மற்றும் செவிலிய மாணவ - மாணவியர், மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.

x