விருதுநகரில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு இன்று ஆய்வு


விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு இன்று ஆய்வு மேற்கொண்டது.

அரசு நிறுவனங்கள், மாணவர் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இக்குழுவின் தலைவராக நந்தகுமார் எம்எல்ஏ பொறுப்பு வகித்து வருகிறார். அதோடு, 18 எம்எல்ஏ-க்கள் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் மாணவர் விடுதிகள், அரசு நிறுவனங்களில் தமிழ்நாடு சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் நந்தகுமார் தலைமையில் எம்எல்ஏ-க்கள் அசோகன், ஆனந்தன், ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, கிரி, கோவிந்தசாமி, துரை.சந்திரசேகரன், சிந்தனைச்செல்வன், வி.பி.நாகைமாலி, வேலு, ஜவாஹிருல்லா ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

விருதுநகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனுடன் ஆலோசனை நடத்திய இக்குழுவினர், தொடர்ந்து விருதுநகரில் உள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி, அருப்புக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு, சாத்தூரில் உள்ள ஜிஆர்டி சூரிய சக்தி ஆலை, டால்மியா சிமென்ட் ஆலை வளாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், விருதுநகர் கூரைக்குண்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அரசு துறை நிறுவனங்களின் தணிக்கை அறிக்கைகள், நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்களுடன் குழுவினர் விவாதித்தனர்.

முன்னதாக, விருதுநகரில் உள்ள ஆதிதிராவிடர் நலக் கல்லூரி மாணவர் விடுதியை பார்வையிட்டு இக்குழுவினர் ஆய்வு செய்தபோது, விடுதி கட்டிடம் சேதமடைந்தும், மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தும் காணப்பட்டன. விடுதியின் பராமரிப்பு மோசமாக இருப்பதாகக் கூறி விடுதிக் காப்பாளரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் நந்தகுமார் கண்டித்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இந்தக் கட்டிடம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு போதிய வசதிகள் இல்லை. இதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட இக்குழு பரிந்துரை செய்துள்ளது. விரைவில், இந்த இடத்தில் ரூ.1.50 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டுக்கு வரும்'' என்று கூறினார்.

x