கடலூர்: கடலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் பாலியல் குற்றங்களில் இருந்து பெண்குழந்தைகளை காக்கவும், பெண் குழந்தைகளுக்கு கற்பிக்கவும் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஜவான்பவான் அருகில் கடலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன், கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். பேரணியில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அரசுப் பள்ளி மாணவியர் அணிவகுத்துச் சென்றனர். பேரணி கடலூர் டவுன் ஹாலில் முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சுந்தர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் லட்சுமி வீரராகவலு, காவல் ஆய்வாளர்கள் த.வள்ளி, தீபா, ஜோதி, ரேவதி, ஜெயலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் சுந்தரி, சுடர்மதி, சிறப்பு உதவி ஆய்வாளர் ஹென்றி ராஜன், மற்றும் காவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.