மதுரை: தேவர் சிலைக்கு மின் கோபுரம் அமைக்க அனுமதிக்காததைக் கண்டித்து பார்வர்ட் ஃபிளாக் கட்சியினர் தர்ணா


தர்ணா

மதுரை: மதுரையில் தேவர் ஜெயந்தியையொட்டி கோரிப்பாளையம் தேவர் சிலை பகுதியில் மின் அலங்கார கோபுரம் அமைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதைக் கண்டித்து நேற்றிரவு தேவர் சிலையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஃபார்வர்ட் பிளாக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

அக்டோபர் 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலையில் ஆண்டுதோறும் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் பெயரில் மின் அலங்கார கோபுரம் அமைக்கப்படும்.

அதன்படி இவ்வாண்டு சிலைக்கு மின் அலங்கார கோபுரம் அமைக்க, கதிரவன் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற பதவியின் பெயரை பயன்படுத்தக்கூடாது என அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த சிலர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில் சுமுக முடிவு. கிடைத்தால் மட்டுமே மின் அலங்கார கோபுரம் அமைக்க அனுமதி தரப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.

இதனையடுத்து கோட்டாட்சியரின் உத்தரவை கண்டித்தும் மின் கோபுரம் அமைக்க காவல்துறையினர் அனுமதி அளிக்கக் கோரியும் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி.கதிரவன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலையின் கீழ் அமர்ந்து நேற்று இரவு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தேவர் சிலை படிக்கட்டில் ஏறி நின்று ஃபார்வர்ட் பிளாக் கட்சியினர் கையில் கொடி ஏந்தியபடி மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில் காவல்துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கதிரவன் உள்ளிட்ட ஃபார்வர்ட் பிளாக் கட்சியினரை கைது செய்ய முயன்றனர்.

அப்போது காவல்துறையினருக்கும் ஃபார்வர்ட் பிளாக் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் அவர்களை தரதரவென இழுத்துச் சென்று போலீஸார் கைது செய்தனர் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

தொடர்ந்து கோரிப்பாளையம் தேவர் சிலை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரையில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சினை காரணமாகவே கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மின் கோபுரம் அமைக்கும் விவகாரம் சர்ச்சையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

x