கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது உயர் அதிகாரிகளின் தவறுகளை கண்டுகொள்ளாமல் விடுவது ஏன்? - ஐகோர்ட் அதிருப்தி


சென்னை: சிறிய குற்றங்களுக்காக கடைநிலை ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் நிலையில் உயர் அதிகாரிகளை அரசுகண்டுகொள்ளாதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவக்குமார் என்பவர், வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். இவரை சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி தனது வீட்டுவேலைக்கு அழைத்து சென்றதாகவும், பின்னர் அங்கு நகை, பணத்தை திருடியதாக குற்றம்சாட்டி அவரை தாக்கி சித்ரவதை செய்ததாகவும் அவரது தாய்கலாவதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டிஐஜி ராஜலட்சுமி மீது வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்த சிபிசிஐடிபோலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை குறித்த கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து நடந்த வாதம்

நீதிபதிகள்: திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கைதி மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதா? கைதியை தாக்கிய சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டிஐஜி உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

அரசு தரப்பு: சம்பந்தப்பட்ட கைதி மீது சிறை குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடந்து வருகிறது.

நீதிபதிகள்: சிறைக்கு வெளியே நடந்த சம்பவத்துக்கு எப்படி சிறை குற்ற வழக்கு பதிவு செய்ய முடியும்? சிறையில் உள்ள விலை உயர்ந்த தேக்குமரத்தை வெட்டி அதிகாரிகள் கட்டில் உள்ளிட்டவற்றை செய்து கொள்கின்றனர். சிறைத் துறையினருக்கு நல்ல சம்பளத்துடன் அனைத்துவசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட சூழலில், இதுபோன்ற புகார்கள் வருவது வேதனை அளிக்கிறது.

அரசின் கடைநிலை ஊழியர் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டை போடுவது போன்ற சிறியகுற்றச் செயல்களில் ஈடுபட்டால், உடனடியாக அவர்கள் மீது வழக்குபதிவு செய்து, துறை ரீதியாக இடைநீக்கம் செய்யப்படும் நிலையில், பெரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இந்த வழக்கில் சிறைத் துறை பெண் டிஐஜி உள்ளிட்ட 14 பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இவ்வாறு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தனர்

x