வீர வணக்க நாளையொட்டி காவலர் நினைவு சின்னத்தில் டிஜிபி மரியாதை


காவலர் வீர வணக்க நாளையொட்டி, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இடம்: டிஜிபி அலுவலகம். படம்: ம.பிரபு

சென்னை: காவலர் வீர வணக்க நாளையொட்டி, காவலர் நினைவு சின்னத்தில் டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து, 120 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

கடந்த 1959-ம் ஆண்டு அக்.21-ம்தேதி லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர்தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ்படையைச் சேர்ந்த 10 வீரர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அக்.21-ம் தேதிகாவலர் வீரவணக்க நாளாக நாடுமுழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஓராண்டில் பணியின்போது தமிழ்நாடு காவல் துறையைச்சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் புஸ்பராஜ் (விருதுநகர் மாவட்டம்), தலைமைக் காவலர் குமரன் (ஆவடி), முதல்நிலைக் காவலர் கார்த்திகேயன் (விருதுநகர் மாவட்டம்), முதல்நிலைக் காவலர் விக்னேஷ் (நாமக்கல் மாவட்டம்) மற்றும் காவலர் ஜீசஸ் ஆல்வின் (தூத்துக்குடி மாவட்டம்) ஆகியோர் மரணம் அடைந்திருந்தனர்.

இவர்கள் உட்பட இந்தியாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த துணை ராணுவப்படையினர் மற்றும் காவல்துறையினர் என 213 பேர்வீர மரணமடைந்திருந்தனர். இவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில், டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, உயிரிழந்த காவலர்களை நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே, சென்னை காவல் ஆணையர் அருண், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உட்பட ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல்படை இந்நாள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். மேலும் 40 போலீஸார் தலா 3 குண்டுகள் என 120 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதல்வர் புகழஞ்சலி: காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் ‘நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பதுபோல், நமது வீடுகளை பாதுகாப்பவர்கள் காவல்துறையினர். தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து கடமையாற்றும்போது உயிர்தியாகம் செய்தோர் பலர். அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீரவணக்க நாளில் வீர வணக்கம் செலுத்துவோம்’ என கூறியுள்ளார்.

தாத்தாவுக்கு அஞ்சலி: காவலர் நினைவுச் சின்னத்தை சுற்றி, ஏற்கெனவே பணியின்போது உயிரிழந்த காவலர்களின் புகைப்படங்கள் பளிங்கு கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அதில், 2020-ல் பணியின்போது உயிரிழந்த சென்னை பெரம்பூரை சேர்ந்த உதவி ஆய்வாளர் குருமூர்த்தி புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

அவரது பேரனான 7 வயது சிறுவன் தருண், காவல்துறை சீருடையில் வந்து தாத்தாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கைகுலுக்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

x