களியக்காவிளை | அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு 


களியக்காவிளை அருகே மீனச்சலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் பாட்டில், தீப்பட்டியுடன் வந்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்.

நாகர்கோவில்: குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கையில் பெட்ரோலுடன் வந்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சியில் மீனச்சல் பகுதியில் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகத்தால் ரேடியோ பார்க் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை கட்ட அப்பகுதியைச் சேர்ந்த நாராயண பிள்ளை என்பவர் அரசுக்கு இரண்டரை சென்ட் நிலத்தை தானமாக வழங்கினார். அவர் மரணமடைந்த நிலையில் அந்த கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. அதில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோது தனது மக்களவை உறுப்பினர் நிதியில் இருந்து பேரூராட்சி சார்பில் படிப்பக கட்டிடம் கட்டித்தரப்பட்டு அதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

மீனச்சல் கிராமப்புற பகுதி என்பதால் ஏராளமான மக்கள் அடிப்படை மருத்துவ தேவைகளுக்கு நகரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பேரூராட்சிக்கு சொந்தமான இந்த படிப்பக கட்டிடத்தில் அரசு சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் படிப்பக கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு அதில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு அனுமதி பெற்று இன்று அதன் திறப்பு விழாவை நடத்த ஏற்பாடுகளும் செய்தனர்.

திறப்பு விழாவிற்கு சுகாதர துறை அதிகாரிகள், மருத்துவர் செவிலியர்கள், களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா உட்பட பலர் வந்திருந்த நிலையில், திடீரென அதே பகுதியைச் சேர்ந்த கீதா குமாரி தங்கச்சி (65) என்ற பெண் சுகாதார நிலையத்தைத் திறந்தால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்வேன் என கூறி பெட்ரோல் பாட்டிலுடன் வந்து மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த பெண்ணோ இது தனக்குச் சொந்தமான நிலம் என கூறி மிரட்டிக் கொண்டே இருந்தார்.

இவரது திருமணத்துக்கு முன்பே இவரது மாமனார் அந்த நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கிய நிலையில், அந்த நிலத்துக்கு திடீரென உரிமை கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தது பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்தப் பெண்ணை ஊர்மக்கள் தடுத்து நிறுத்தி பெட்ரோல் பாட்டிலை பறித்ததுடன் கட்டிடத்தின் வாசலில் இருந்து அவரை அப்புறப்படுத்தி களியக்காவிளை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், ஊர் மக்கள் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை போருராட்சி தலைவர் சுரேஷ் திறந்து வைத்தார். போலீசார் தற்கொலை மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்கும் வேளையில் பெண் எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x