“ரேஷன் பொருட்களை சரியான முறையில் வழங்கிடுக” - விஜய பிரபாகரன் கோரிக்கை


திருப்போரூர்: ரேஷன் பொருட்களை சரியான முறையில் மக்களுக்கு வழங்க வேண்டுமென திருப்போரூர் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜய பிரபாகரன் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

திருப்போரூர் அடுத்த தையூர் பகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் திருப்போரூர் ஒன்றியம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசியதாவது: "தீபாவளி நெருங்குவதால் ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் உரிய பொருட்கள் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு அனைத்து பொருட்களும் ரேஷன் கடையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கேளம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் மழைக்காலம் தொடங்கவே இல்லை.

இதற்குள் தற்போது ஆறு சதவீத மழை சென்னையில் பெய்துள்ளது. இதற்குள் மழை நீரை வெளியேற்றி விட்டோம் என திமுக அரசு விளம்பரப் படுத்தி வருகிறது. தேமுதிகவில் வாரிசு அரசியல் என்று கூறுகிறார்கள். திமுகவில் நான் அரசியலுக்கு வரமாட்டேன் நடிப்பு மட்டுமே எனது பணி என்று சொன்னவர்கள் தற்போது எம்எல்ஏ-வாகி, துணை முதல்வராகி உள்ளார்கள். ஆனால், எனக்கு இளைஞரணி செயலாளராக பொறுப்பை நீங்கள் வழங்கினால் அதை உங்களுக்காக ஏற்று திறம்பட செயலாற்றுவேன்" என்று விஜய பிரபாகரன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விஜய பிரபாகரனுக்கு மாலை, மலர் கீரிடம் அணிவித்து, வெள்ளி வேல் பரிசும் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக செயலாளர் அனகை முருகேசன், திருப்போரூர் ஒன்றியச் செயலாளர் கராத்தே கோபிநாத், செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x