கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த 7 மாத காலமாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரிபேட் மானிய தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, கைத்தறி நெசவு பாவு பட்டறை தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் கடலூர் செல்லங்குப்பத்தில் உள்ள கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெசவாளர்களர்களுக்கான தறி கூலி வங்கிகள் மூலம் தரப்படும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும், கடந்த 40 ஆண்டு காலமாக உயர்த்தப்படாமல் இருக்கும் ரிபேட் மானிய தொகையை மாற்றி அமைக்க வலியுறுத்தியும், விற்பனை விலைக்கு ரிபேட் மானியம் வழங்கக் கோரியும், பெடல் தறி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கிடக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்டப் பொருளாளர் தயாளன், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஆளவந்தார், ராஜேந்திரன், எஸ்.முருகவேல், துணைச் செயலாளர்கள் குமார், அரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். முன்னதாக செல்லங்குப்பத்திலிருந்து உதவி இயக்குநர் அலுவலக வரை கைத்தறி தொழிலாளர்கள் உர்வலமாக வந்தனர்.