கும்பகோணம்: மாத ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தஞ்சாவூர் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று அளித்தனர்.
தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார்.
இதில் அரசுத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் சங்க சிஐடியு மாநில துணைச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வள்ளி, மாவட்டச் செயலாளர் பி.சாய்சித்ரா உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; “மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியில் இருக்கும் எங்களுக்கு மாத ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாத ஊதியத்தைத் தாமதமில்லாமல் பிரதி மாதம் 5ம் தேதிக்குள் தவறாது வழங்க வேண்டும்.
ஸ்கோர் ஷீட் மார்க் என்ற முறையில் ஊதியம் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர் ஆதிக்கம் செய்வதைக் கைவிட வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் மகப்பேறு கால ஊதியத்துடன் விடுப்பு, தற்செயல் விடுப்பு அளிக்கப்பட வேண்டும். தேசிய, பண்டிகை விடுமுறை நாட்களில் பணிக்கு வர நிர்பந்திக்கக் கூடாது. மாத ஊதியத்தை ஊழியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்க வேண்டும்.
கமிஷன், ஊழல் நடைமுறைகளைக் கைவிட வேண்டும். கிராமப்புற வாழ்வாதார இயக்கம் என்ற பெயரில் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் ஊழியர்களை கட்டாயப்படுத்தி வரவழைக்கக்கூடாது. பணிக்காலத்தில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். மரணடைந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
இஎஸ்ஐ, பிஎஃப் பிடித்தம் செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு 1 மாத சம்பளத்தை முன் பணமாகவும், 1 மாத சம்பளத்தை ஊக்கத் தொகையாகவும் வழங்க வேண்டும். மருத்துவ உபகரணங்களின் பராமரிப்பு செலவுகளை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு 2 செட் உடைகள் வழங்க வேண்டும். போக்குவரத்து படி வழங்க வேண்டும்" என்று கோரிக்கைகளை மனுவில் பட்டியலிட்டிருந்தனர்.