பொங்கல் பரிசுத் தொகுப்பு பணத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்: காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்


கும்பகோணம்: பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பணத்தை குடும்ப அட்டைதாரரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன், தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: 'தமிழக அரசு 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கம் போல் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேட்டி, சேலைகள் கட்டணம் இல்லாமல் வழங்குவதற்காக முதற்கட்டமாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான வேட்டி, சேலைகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள நெசவாளர்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்திட முன் வந்திருப்பதற்காக தமிழக அரசின் அறிவிப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டி வரவேற்று நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் பொங்கலுக்கான பொருட்களில் சீனிக்குப் (வெள்ளை சர்க்கரை) பதிலாக, தமிழகத்தில் தயாரிக்கப்படும் நாட்டு வெல்லத்தைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும். இதனால் வெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வு மேம்படும். பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட இருக்கின்ற பொங்கல் செங்கரும்பிற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையினை உரிய கொள்முதல் தொகை முழுவதையும் இடைத்தரகர்கள், அரசியல் குறுக்கீடுகள், கமிஷன்கள் எதுவும் இல்லாமல், கரும்பு விவசாயிகளின் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைத்திட வேண்டும்.

அதேபோல், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கின்ற பொங்கல் பரிசுத்தொகை ரூ. 1000-ஐ, அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைத்திடவும் கேட்டுக்கொள்கின்றேன். இந்த கோரிக்கைகளின் மீது தாங்கள் கடமை உணர்வோடு மேற்கொள்கின்ற நடவடிக்கையினை, அக். 31-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.'' இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


x