கும்பகோணம்: சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் மண்டபத்தில் 19-ம் நள்ளிரவு படுத்துறங்கிய பக்தர்கள் தண்ணீர் பாய்ச்சி விரட்டியடிக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து இரவுக் காவலர்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அறுபடை வீடுகளுள் 4-ம் படை வீடாகவும், தந்தைக்கு மகன் உபதேசம் செய்த தலமாகவும் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். இதனால், அதிகாலை முதல் இரவு வரை பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி கார்த்திகை நட்சத்திரத்தையொட்டி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 60-க்கும் மேற்பட்டோர், அன்று இரவு கோயிலின் தெற்கு முகப்பு முன்புறம் உள்ள மண்டபத்தில் தூங்கினர். அப்போது, தரையில் திடீரென தண்ணீர் வந்ததால், தூங்கிக்கொண்டிருந்த பக்தர்கள் பதறியடித்து எழுந்தனர். பின்னர், வேறு வழியின்றி அவர்கள் தெருக்கள் மற்றும் வீட்டுத் திண்ணைகளில் படுத்துறங்கி காலையில் எழுந்து சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக பக்தர்களுக்கும் கோயில் நிர்வாக பணியாளர்களுக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது தொடர்பாகச் செய்தி பிரசுரமானது. இதனையறிந்த அறநிலையத் துறை துணை ஆணையர் உமாதேவி, கோயில் நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடம் தகவல் அளிக்காத, கோயிலின் இரவுக் காவலரான நிரந்தர பணியாளர் சுவாமிமலையைச் சேர்ந்த சின்னதுரை(42) மற்றும் இரவுக் காவலரான தற்காலிக பணியாளர் சுப்பிரமணியன் (50) ஆகிய இருவரையும் சக்கராப்பள்ளி, சக்கரவாகீஸ்வரர் கோயிலின் இரவுக் காவலர்களாக பணியிட மாற்றம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.