தாம்பரம் மாநகராட்சிக் கூட்டம்: ப்ளீச்சிங் பவுடர் பாக்கெட்டை கையில் ஏந்திய படி அதிமுக வெளி நடப்பு


தாம்பரம்: "தாம்பரம் மாநகராட்சியில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை தீபாவளி வருமானத்திற்காக போடப்பட்ட மாநகராட்சி கூட்டம்" எனக் கூறி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிளீச்சிங் பவுடர் பாக்கெட்டுகளை கையில் ஏந்திய படி இன்றைய கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தாம்பரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளிலும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்து குரல் எழுப்பினர்.

பின்னர்,"இந்த மாமன்றத்தின் மூலம் இதுவரை எந்தவொரு மக்கள் நலத் திட்டங்களும் நடைபெறவில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் மக்களின் குரலாக நாங்கள் எடுத்துரைத்தும் எந்த ஒரு பதிலும் இல்லாமல் இருக்கிறது. தற்போது நடைபெறுகிற கூட்டம் தீபாவளி வருமானத்திற்கான கூட்டமாகவே உள்ளது” என கோஷம் எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவரான சேலையூர் சங்கர் தலைமையில் மாநகராட்சியை கண்டித்தும், மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது அவர்கள், பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது, என்பதை சுட்டிக் காட்டும் விதமாக ப்ளீச்சிங் பவுடர் பாக்கெட்டை கையில் ஏந்தியபடி சென்றனர். 38-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யாவின் வார்டில் பாதாளச் சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

வேறு பகுதியில் தண்ணீர் அகற்றுவதற்காக மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் இருந்து மோட்டாரை எடுத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சரண்யாவை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அவரது குழந்தையை கடத்தி விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட சரண்யா, தேம்பித் தேம்பி அழுதபடி இச்சம்பவம் குறித்து தெரிவித்தார். மாநகராட்சி அதிகாரிகளின் செயலால் தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் சரண்யா தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரியை கடுமையாக கண்டித்தார். மேலும், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் உறுதி அளித்தார். மாமன்ற உறுப்பினர் தேம்பி அழுதபடி குற்றச்சாட்டை முன்வைத்ததால் மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

x