நீலகிரி காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு: 60 குண்டுகள் முழங்க மரியாதை!


உதகை: காவல்துறையில் சிறந்த முறையில் பணியாற்றி வீரமரணம் அடைந்தவர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, எஸ்பி-யான என்.எஸ்.நிஷா பங்கேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். காஷ்மீர் லடாக் பகுதியில் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோர் 21-ம் தேதி சீனப் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 10 காவலர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி அந்தந்த மாவட்டத்தில் உள்ள காவல்துறை சார்பில் உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிலையில், காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் ராஜ்பவன் மாளிகை அருகேயுள்ள ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பு மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, எஸ்பி-யான நிஷா ஆகியோர் கலந்து கொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பணியின் போது மரணம் அடைந்த காவலர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண் முன்பு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது, நடப்பாண்டில் வீர மரணம் அடைந்த ஏராளமான காவலர்களின் பெயர்களை வாசித்து அவர்களின் தியாகத்தை எஸ்பி நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து, மூன்று முறை வானத்தை நோக்கி சுட்டு 60 குண்டுகள் முழங்க ஆயுதப்படை போலீஸார் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர். இதில், கூடுதல் எஸ்பி-க்கள், டிஎஸ்பி-க்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

x