நெருங்கும் தீபாவளி பண்டிகை: சிவகாசியில் பட்டாசு வாங்க குவியும் வெளிமாவட்ட மக்கள்


சிவகாசி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இருந்து பட்டாசு வாங்குவதற்காக சிவகாசிக்கு மக்கள் வருவதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகாசியில் நிரந்தர உரிமம் பெற்ற 2,500-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனைக் கடைகள் உள்ளன. விதிமுறைகள், கட்டுப்பாடு காரணமாக பட்டாசுகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக் கட்டணம் அதிகம் என்பதால், நாட்டின் பிற பகுதிகளில் விற்பனைக்கு வரும்போது பட்டாசு விலை அதிகரிக்கிறது. உற்பத்தி செய்த இடத்திலேயே விற்பனை செய்யப்படுவதால், சிவகாசியில் உள்ள கடைகளில் 50 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில்பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைவு மட்டுமின்றி, பட்டாசுகளை வெடித்துப் பார்த்தும் வாங்கலாம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகாமற்றும் ஆந்திரா மாநில மக்களும் சிவகாசிக்கு நேரடியாக வந்து,பட்டாசு வாங்குவதை விரும்புகின்றனர். தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பட்டாசு வாங்குவதற்காக வெளியூர் மக்கள் சிவகாசிக்கு அதிக அளவில் வந்துள்ளதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பட்டாசு மொத்த விற்பனையாளர் ராஜேஷ் கூறும்போது, "ஆடிப்பெருக்கு அன்று தீபாவளி பட்டாசு சிறப்பு விற்பனை தொடங்கியது. தொடக்கத்தில் ஆர்டர்கள் குறைவாக வந்தாலும், ஆயுத பூஜையின்போது விற்பனை சூடுபிடித்தது. துர்கா பூஜையும், தீபாவாளியும் நெருங்கி வந்ததால், வட மாநிலங்களுக்குத் தேவையான பட்டாசுகள் முன்கூட்டியே அனுப்பப்பட்டு விட்டன. இந்த 10 நாட்களும் உள்ளூர் வியாபாரத்தை மையப்படுத்தியே உள்ளது. வெளிமாவட்ட மக்கள் வருகையால் பட்டாசு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் இப்போதே குறிப்பிட்ட சில ஃபேன்சி ரகப் பட்டாசுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனை தீவிரமடையும்" என்றார்.

x